அம்பாறை மாவட்டத்தில் தூய நீர் விநியோக கட்டமைப்பை நிர்மாணிக்க ஜப்பான் உதவி
அம்பாறை மாவட்டத்தின், மஹாஓயா பிரதேச செயலகத்தைச் சேர்ந்த லஹுகல பிரதேசத்தில் தூய நீர் விநியோக கட்டமைப்பை நிறுவுவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தனது Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக சுமார் 85,682 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 16 மில்லியன்) தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தது.
இந்த நன்கொடைத் திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தலத்தில் தூதுவர் சுகியாமா அகிராவின கிறீன் குரொஸ் ஸ்ரீலங்காவின் தலைவர் கலாநிதி. ஜகத் செனெவிரட்ன ஆகியோருக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.
2005ஆம் ஆண்டு கிறீன் குரொஸ் ஸ்ரீலங்கா நிறுவப்பட்டது முதல் தூய நீர் மற்றும் தூய்மை வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை சமூகங்களில் முன்னெடுப்பதுடன், “water for life and peace” நிகழ்ச்சியின் கீழ் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நலன்புரி மற்றும் கல்வி ஆகியவற்றை உறுதி செய்து வருகின்றது.
உலர் வலயத்தை இந்த கிராமம் அமைந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் லஹுகல கிராம சேவகர் பிரிவில் வசிக்கின்றனர். இவர்களுக்கு தூய நீரைப் பெற்றுக் கொள்வது என்பது பெரும் பிரச்சனையாக அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் வசிப்போருக்கு வாரத்தில் ஒரு நாள் பவுசரில் நீர் விநியோகிக்கப்படுவதுடன், அப்பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இது போதியதாக அமைந்திருக்கவில்லை.
இப்பகுதியில் காணப்படும் நீர்நிலைகளிலிருந்து கிடைக்கும் நீர் பருகுவதற்கு உகந்ததாக அமைந்திருக்கவில்லை. இந்த நீர் நிலைகள் விவசாய இரசாயனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீரினால் பரவக்கூடிய நோய்க்கிருமிகளின் ஆபத்தையும் கொண்டுள்ளன.
இப்பிரதேசவாசிகள் எதிர்நோக்கும் நெருக்கடியை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த நன்கொடை உதவியினூடாக, நீர் வடிகட்டல் வசதிகள், நீர் தாங்கி மற்றும் குழாய் அமைப்பு போன்றவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனூடாக இந்தப் பின்தங்கிய கிராமத்திலுள்ள சகல இல்லங்களுக்கும் தூய நீரை சீராக விநியோகிக்கக்கூடியதாக இருக்கும். இந்த நன்கொடையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் கலாநிதி. செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,
"இந்தத் திட்டத்தினூடாக, குறைந்த வசதிகள் படைத்த குடும்பங்களுக்கு தமது தினசரி தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு தூய நீரை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். குறிப்பாக பல வருடங்களாக இவர்களுக்கு பெரும் நெருக்கடியாக காணப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்ளும் பிரச்சனை தீர்க்கப்படும்.
தூய நீர் விநியோகத்துக்கான பெருமளவு தட்டுப்பாடு காணப்படுவதால் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை காரணமாக இப்பகுதியில் நீரினால் பரவும் நோய்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்த நீர் விநியோகத் திட்டத்தினூடாக இந்த தடைகள் அனைத்தும் நீக்கப்படுவதை நாம் உறுதி செய்வதுடன், எமது இளம் தலைமுறையினருக்கு புதிய எதிர்பார்ப்புகளை வழங்குவோம்.
அண்மையில் நீர் விநியோகத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட தம்பிட்டிய மற்றும் புலவல ஆகிய பகுதிகளிலிருந்து நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மஹாஓய மாவட்ட ஆதார வைத்தியசாலையிலிருந்து கிடைக்கும் அறிக்கைகளினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
லஹுகல திட்டத்தினூடாகவும் இவ்வாறான பெறுபேறை நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஜப்பான் அரசாங்கம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தமைக்கான கிறீன் குரொஸ் ஜப்பான் அமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)