'கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முக்கிய தகவல்கள் திணைக்களத்தில் இல்லை'

'கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முக்கிய தகவல்கள் திணைக்களத்தில் இல்லை'

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முக்கிய தகவல்கள் எதுவும் அத்திணைக்களத்தில் இல்லை என்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

சர்சைக்குரிய கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி, MRCA/13/1/AC/12 எனும் பதிவிலக்கத்தின் கீழ் இத்திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

"இதனால், திணைக்களம் கோரிக்கை விடுக்கின்ற சமயத்தில் குறித்த மகளிர் அரபுக் கல்லூரியின் வருடாந்த கணக்கறிக்கைகளை அதன் முகாமைத்துவம் வழங்க வேண்டும்" என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியினால் 1998.07.19ஆம் திகதி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம், இந்த அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபை உறுப்பினராக ஏழு பேர் செயற்பட்டுள்ளனர்.

இதில் ஏ.எச்.எல்.ஏ. சலீம் தலைவராகவும், எம்.சுபைர் பதில் தலைவராகவும், எம். ஜெமீல் மற்றும் பாயிஸ் முஸ்தபா ஆகியோர் உப தலைவர்களாகவும், ஏ.எச்.எம்.கலீல் பொருளாளராகவும், ஏ.ஆர்.எம். ரூஹுல் ஹக் செயலாளராகவும் எம். றஹ்மான் ஹசன் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளனர்.

இந்த அரபுக் கல்லூரியின் தற்போதைய முகாமைத்துவ சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கோரியதற்கு 1998.07.19ஆம் திகதிய தகவலை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் முகாமைத்து சமூக உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல், தற்போதைய முகாமைத்து சபை தெரிவுசெய்யப்பட்ட கூட்டத்தின் கூட்ட அறிக்கை போன்ற தகவல்கள் எதுவும் திணைக்களத்திடமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அரபுக் கல்லூரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் என்ற அடிப்படையில், மாணவர்களின் முன்னேற்றம் கருதி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பதற்காக சில சிபாரிசுக் கடிதங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி எம்.ஏ. ஹசன் சமர்ப்பித்த தகவலறியும் விண்ணப்பத்திற்கு திணைக்களத்தின் தகவல் அதிகாரியான எம்.எஸ். ஆலா அஹமட் கடந்த 28ஆம் திகதி வழங்கிய பதிலேயே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.