வெளிநாட்டமைச்சின் கொன்சியுலர் சேவைகளைப் பன்முகப்படுத்த பிராந்திய அலுவலகங்கள் ஸ்தாபிப்பு

வெளிநாட்டமைச்சின் கொன்சியுலர் சேவைகளைப் பன்முகப்படுத்த பிராந்திய அலுவலகங்கள் ஸ்தாபிப்பு

வெளிநாட்டமைச்சின் பரப்பெல்லையிலுள்ள கொன்சியுலர் சேவைகளைப் பன்முகப்படுத்துவது குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க சேவைகளை கிராமங்களுக்கு கொண்டுசெல்வதென்ற ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக, வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டமைச்சின் செயலாளர் அட்மிரல். பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் செயலாளர் கொலம்பகே மேலும் குறிப்பிடுகையில்,

"கடந்த பத்து வருடங்களில் கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள மூன்று கொன்சியுலர் அலுவலகங்கள் தற்போதைய அரசாங்கத்தினால் அரசாங்க சேவைக்காக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது என்றும், இதேபோன்று மேலும் இரண்டு பிராந்திய அலுவலகங்களை இந்த வருட முடிவிற்குள் பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் நிறுவுவதற்கான ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும்" தெரிவித்தார்.

“நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து தினசரி இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான கொன்சியுலர் சேவைகளைப் பெறுவதற்காக, கொழும்பிலுள்ள வெளிநாட்டமைச்சின் கொன்சியுலர் பிரிவுக்கு வருகின்றனர்.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில், இச்சேவைகளை முன்பதிவுகளின்றி வழங்குவதற்கு இவ்வமைச்சு கடுப்பாடுகளை விதித்து, பொதுமக்கள் வருகைகளை மட்டுப்படுத்தவேண்டிய கட்டாயத்திலுள்ளது.  இதன் காரணமாக இன்னல்களை எதிர்கொள்வோருக்கான இடருதவிகளை வழங்கும் நோக்குடன், ஆரம்ப கட்டமாக மாகாண மட்டத்தில் பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கையை வெளிநாட்டமைச்சு எடுத்துள்ளது” என்றார்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தமக்கான இழப்பீடுகளைப் பெறுதல், இன்னும் வழங்கப்படாத சம்பளங்கள், சமூக பாதுகாப்பு கொடுப்பனவுகள் ஆகியவற்றைப் பெறுதல், வெளிநாடுகளில் இறந்த இலங்கையர்களின் உடல்களை இலங்கைக்கு கொண்டுவருதல், சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்துதல் போன்ற சிறப்புச் சேவைகளை இந்த பிராந்திய கொன்சியுலர் அலுவலகங்கள் வழங்கும்.

அத்துடன், வெளிநாட்டுச் சிறைகளிலுள்ள மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விடுவித்தல், வெளிநாட்டில் பிறப்பு மற்றும் இறப்புக்களின் பதிவுகள், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருதல் ஆகிய சேவைகளும் இந்த அலுவலகங்களால் வழங்கப்படும்.

கிராமங்களிலுள்ள மக்களுக்கு நெருக்கமாக அரசாங்க சேவைகளைக் கொண்டுசெல்லவேண்டுமென்ற மேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், நிதி நெருக்கடிகளின் மத்தியிலும் இவ்வருடத்தினுள் பதுளை மற்றும் அம்பாறை அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்செயற்றிட்டத்திற்கு மாகாண சபைகளும் உள்ளூராட்சி அதிகார சபைகளும் பெரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வெளிநாட்டுச் செயலாளர் கொலம்பகே மேலும் குறிப்பிட்டார்