தேசியப் பட்டியலிலாவது 50 % பெண்களுக்காக ஒதுக்குமாறு பரிந்துரை
தேசியப் பட்டியலிலாவது அரைப்பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் முன்மொழிந்துள்ளது.
இந்த ஒன்றியம் சார்பில் விசேட குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்த அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, "பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அரசாங்க சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 33 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விசேட குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டது.
சகல தேர்தல்களுக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் பெர்னாந்துபுள்ளே சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்வது சிக்கலானதாகவே உள்ளது.
பெண்கள் தொடர்பில் சமூகத்தின் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும். தற்பொழுது கடைப்பிடிக்கப்படும் வீகிதாசார தேர்தல் முறையானது பெண்களுக்கு அந்தளவு சாதகமானதாக இல்லையென்றும் தெரிவித்தார். நாட்டுக்குள் தேர்தல் வன்முறைகள் இடம்பெறுவதும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளில் பெண்கள் உயர் பதவிகள் வழங்கப்படாமை குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற முறைமை போன்று, இதற்கு முன்னர் முன்மொழியப்பட்ட மாகாணசபைத் தேர்தல் முறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்கு அதிக இடம் வழங்கப்பட்டிருந்ததாக விசேட குழுவின் தலைவர், சபை முதல்வர் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்த தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறையை இரத்துச் செய்யாமல் பெண்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்புக்களை வழங்க முடியாத என அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா இங்கு சுட்டிக்காட்டினார். தேசியப் பட்டியலின் ஊடாக உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறை குறித்து ஆழமாக ஆராயவேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை பொருத்தமானது அல்ல என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
கிராம மட்டக்களில் பெண்களுக்கு பலமான நிறுவன அமைப்புக்கள் இருப்பதாகவும், பெண்கள் அரசியலுக்கு வராமலிருப்பது கலாசார ரீதியான பிரச்சினை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குழுவின் முன்னிலையில் கருத்துத் தெரிவித்தார்.
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிவில் சமூக அமைப்புக்கள் பெரும் பங்காற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் தற்பொழுது காணப்படும் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது அவசியம் என மகளிர் அரசியல் கல்வி நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல்கா பெர்னாந்து தெரிவித்தார்.
பெண்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 30 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் இங்கு யோசனை முன்வைத்தார்.
தேசியப் பட்டியலில் 30 வீதம் பெண்களுக்கு வழங்கும் வகையில் புதிய நடைமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் நிமல்கா பெர்னாந்து குறிப்பிட்டார்.
தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் தபால்மூலம் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் புதிய முறைமை உருவாக்கப்பட வேண்டும் என சிவில் அமைப்புக்கள் தெரிவித்தன.
தேர்தல் செலவுகளைக் குறைப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் குறித்து அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்கு விசேட வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் யெஹெலிய அறக்கட்டளை குறிப்பிட்டது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியமானது என கங்கொடவில ஐக்கிய சமூக சேவை பெண்கள் அமைப்பு, இக்குழு முன்னிலையில் தெரிவித்தது.
இக்கூட்டத்தில் ஐந்து பெண்கள் அமைப்புக்கள் தமது முன்மொழிவுகளை முன்வைத்திருந்தன. இந்தக் குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி நடைபெறவிருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.
இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)