இலங்கை கடற் பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் நுழைந்தால் கைது செய்வோம்: கடற்படை தளபதி
கச்சத்தீவிலிருந்து றிப்தி அலி
இலங்கை கடற் பரப்பினுள் இந்திய மீனவர்கள் நுழைந்தால் கடற்படைத் அவர்களை கைது செய்யும் என கடற் படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
'இலங்கைச் சட்டத்திற்கு அமைவாகவே இந்திய மீனவர் விடயத்தினை நாங்கள் கையாள்கின்றோம். இதில் எந்தவித அரசியலுமில்லை' என அவர் குறிப்பிட்டார்.
"இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோதமாக நுழைந்து மிக நீண்ட காலமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற விடயம் அனைவருக்கு தெரிந்ததொன்றாகும். இதற்கு ஓரிரவினுள் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளினதும் மீன்பிடித் திணைக்களங்கள் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இரு நாட்டு மீன்பிடித் திணைக்களங்களும் இணைந்து இந்த விடயத்திற்கு நீண்ட காலத் தீர்வொன்றினை பெற வேண்டும் என கடற்படைத் தளபதி கூறினார்.
இதன் ஊடாக இப்பிரச்சினையினை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருடத்திற்கான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா மிகத் திறம்பட ஏற்பாடு செய்த கடற்படைத் தளபதி, யாழ். மாவட்ட செயலாளர் மற்றும் அவர்களது உத்தியோகதர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நன்றிகளைத் தெரிவிப்பதாக ஜனாதிபதியின் செயலாளா சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த திருவிழாவிற்கு இந்திய பக்தர்களும் வர வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் தொடர்பில் எந்தவித கருத்தும் கூற முடியாது என்றார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ஆம் திகதி சனிக்கிழமை திருப்பலியுடன் நிறைவடைந்தது.
இந்த திருப்பலியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,
"மீனவர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் இந்திய மீனவர்கள் விடயத்தில் செயற்படுகிறோம்.
அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.
இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது" என்றார்.
இதேவேளை, வரலாற்றில் முதற் தடவையாக இந்திய பக்தர்களின் பங்குபற்றலின்றி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை பி.ஜே.ஜெபரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இத்திருவிழாவில் சுமார நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கை கடற்படையினர் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கச்சதீவு சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டது. தொடர்ச்சியாக வருடாந்தம் நடைபெற்று வருகிற இந்த திருவிழாவில் - இன, மத, மொழி வேறுபாடின்றி பக்தர்கள் கலந்துகொண்டமையினால் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இலங்கை கடற் படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, யாழ். மாவட்ட செயலாளர் ஏ. சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலர் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.
எனினும், சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்திய பக்தர்கள் இந்த வருட திருவிழாவில் பங்கேற்கவில்லை.
இதனால், திருவிழா காலப் பகுதியில் அங்காடி கடைகள் நடத்திய வியாபாரிகள் பாரியளவிலான நஷ்டத்தினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)