'ஊடகவியலாளர்களிடம் மூலாதாரத்தை வெளிப்படுத்த கோருவது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்'
ஊடகவியலாளர்களிடம் மூலாதாரத்தை வெளிப்படுத்த அழுத்தம் பிரயோகிப்பதானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மீறும் செயற்பாடாக காணப்படுவதுடன், ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் செயற்பாடாகவும் குறித்த நடவடிக்கை காணப்படுகின்றது என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்தது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"சுயாதீன ஊடகவியலாளராக செயல்படும் சஜீவ விஜேவீர தனது இணையத்தளமான rata.lk இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை தொடர்பிலான மூலாதாரங்களை வெளியிடுமாறு கோரி அழுத்தம் கொடுக்கும் வகையில் கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரால் காலி தலைமையக காவல்துறை நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் சம்பந்தமாக கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய “கொரோனா பணிகளில் விலகி மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளும் மருத்துவர்கள்” என்ற தலைப்பின் கீழ் செய்தி கட்டுரை பிரசுரிக்கப்பட்டது தொடர்பாக மருத்துவமனை பணிப்பாளரான செல்டன் பெரேரா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளமை அறியக் கிடைக்கின்றது.
குறித்த கட்டுரை தொடர்பாக மூலாதார தகவல்கள் எங்கிருந்து, எவ்விதத்தில் கிடைக்கப்பெற்றது போன்ற விடயங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு குறித்த முறையீட்டில் கோரியிருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.
தகவல் பெற்றுக்கொண்ட மூலாதாரங்களை வெளிப்படுத்த கோரி ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்படும் அழுத்தமானது ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துவதாகவும், தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளாகவுமே சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.
தகவல் தேடல், பெற்றுக்கொள்ளல், அணுகல் மற்றும் வெளிப்படுத்தல் தொடர்பாக காணப்படும் 2016 ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் தொடர்பான 36ஆம் பிரிவை மீறும் நோக்கத்துடன் மருத்துவமனை பணிப்பாளர் செயல்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன் ஊடகவியலாளரான சஜீவ விஜேவீர நாட்டு பிரஜை என்ற ரீதியில் குறித்த சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தகவல் பெற்றுகொள்வதற்கான அரசியலமைப்பு ரீதியான உரிமையை பயன்படுத்தியுள்ளார் என்பதையும் சுதந்திர ஊடக இயக்கம் கவனத்தில் கொண்டு வந்துள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 40ஆவது பிரிவு தொடர்பாக கவனம் செலுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், வைத்தியசாலை பணிப்பாளர் முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அதிகாரி (Whistle-blower) களின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளமை தொடர்பிலும் சுதந்திர ஊடக இயக்கம் தமது கவனத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த பிரிவுக்கு அமைய “ஏதேனும் பகிரங்க அதிகாரசபையின் அலுவலர், வெளியிடப்படுவதற்கு அனுமதிக்கப்படும் ஏதேனும் தகவலை விடுவித்தல் அல்லது வெளியிடுதலுக்காக ஏதேனும் தண்டனை ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது வேறு வகையாக உட்பட்டவராதல் ஆகாது.”
மேலும் இந்த கட்டுரை தொடர்பான ஆதாரங்களை வெளியிடக் கோரி காவல்துறையிடம் அளிக்கப்பட புகாருக்கு அமைய குறித்த கட்டுரையை வெளிப்படுத்திய முறைகேடுகளை அம்பலப்படுத்தும் அதிகாரி (Whistle-blower)யின் தகவல்களை வெளிப்படுத்துவதானது அவரின் தனிநபர் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கையாக காணப்படுகின்றது.
இது போன்ற பேரழிவு காலங்களில் சர்வாதிகார அணுகுமுறைகளால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து விதமான பணிகள் பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்வதானது பொது நலன் கருதிய செயற்பாடாகவே சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. ஏதாவது செய்தி அல்லது விமர்சனங்கள் வெளியிடப்படும் போது அதற்கு பதிலளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சஜீவ விஜேவீர ஊடகவியலாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அழுத்தம் கொடுக்கப்பட்டு குறித்த கட்டுரை தொடர்பான மூலாதாரங்களை பெற்றுகொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுதல் மற்றும் செய்தி அறிக்கையிடலில் அழுத்தம் பிரயோகித்தலானது ஊடக சுதந்திரம் மற்றும் பிரஜைகளுக்கு காணப்படும் தகவல் அறியும் உரிமைக்கும் ஆன பாரிய அச்சுறுத்தலாக சுதந்திர ஊடக இயக்கம் கருதுவதுடன் குறித்த செயற்பாடு தொடர்பில் தமது கண்டனத்தையும் இவ் ஊடக அறிக்கையில் மூலம் தெரிவித்துக் கொள்கின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)