முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா?
றிப்தி அலி
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலப் பகுதியில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் நிச்சயம் திருத்தம் மேற்கொள்ளப்படும்" என நீதி அமைச்சர் அலி சப்ரி அண்மையில் அறிவித்திருந்தார்.
இதில் எந்தவித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பினை அடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து இந்த திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.
சமூக ஊடகங்களின் மூலமாகவும் அமைச்சரின் இந்த தீர்மானத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை, இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆதரவு தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நாட்டில் 1951ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் 1975ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் 1975ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை குறித்த சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. எவ்வாறாயினும், முஸ்லிம் சமூகத்திலிருந்தும், அதற்கு வெளியிலிருந்தும் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, முன்னர் செயற்பட்ட பல நீதி அமைச்சர்களினால் பல குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வகையான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரை எந்த சிபாரிசுகளும் அமுல்படுத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையிலேயே நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்ட பின்னரும் வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தலைமையில் புதிய குழுவொன்றினை நியமித்தார்.
இந்தக் குழுவின் சிபாரிசுகள் வெளிவருவதற்கு முன்னர், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுபோன்று காதி நீதிமன்ற முறை இல்லாமலாக்கப்பட வேண்டும் மற்றும் பலதார திருமணம் தடைசெய்யப்பட வேண்டும் என்ற தீர்மானமொன்று கடந்த ஜுலை 19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தீர்மானத்தினை மறு பரீசிலனை செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றினை விடுத்திருந்தது.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளமால் இச்சட்டத்தினை திருத்தம் மேற்கொள்ள முடியாது என எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டு ஆளுங் கட்சியினை ஆதரவளித்து வரும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.
அதேபோல், நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர்களாக செயற்பட்ட அஷ்ஷெய்க் அர்கம் நூராமீத், ஏ.பீ.எம். அஷ்ரப் உள்ளிட்ட மூன்று உலமாக்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந்த சட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது மூடு மந்திரமாகவே காணப்படுகின்றது. எனினும் பெண்களின் திருமண வயதெல்லையினை 18ஆக நிர்ணயித்தல், பெண் காதி நீதி நியமிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஆதரவாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தை ஆதரியுங்கள் என இலங்கையிலுள்ள முஸ்லிம் தலைவர்களிடமும், அரசியல்வாதிகளிடம் மதம் மற்றும் மத ரீதியான நம்பிக்கைகளுக்கான சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கலாநிதி அஹமட் சஹீட் அண்மையில் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார்.
ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கு சம உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கும் வகையில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
"முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பானது முஸ்லிம் பெண்களுக்கு நீதியை சிறப்பாக அணுகுவதற்கான வழிமுறைகளை உள்ளடக்க வேண்டும். முஸ்லிம் விவாக விவகாரத்துச் சட்டம் மற்றும் ஆண்களை மட்டுமே கொண்ட காதி நீதிமன்ற முறைமை, முஸ்லிம் பெண்கள் மீதான உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றை சீர்திருத்துவதற்காக கடந்த 60 வருடங்களாக நீடித்து வரும் போராட்டத்தில் இது ஒரு முக்கிய தருணமாகும். இந்த வாய்ப்பை வீணாக்கக் கூடாது" எனவும் அஹமட் சஹீட் தெரிவித்தார்.
அத்துடன் முஸ்லிம், கண்டியன், தேசவழமை உள்ளிட்ட தனியார் சட்டங்களை திருத்துமாறும் இவற்றில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாரபட்சமான அம்சங்களை நீக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்ற இரு தரப்பினரும் தற்போது தங்களின் பிரச்சாரங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த சட்டத் திருத்த விடயத்தில் அரசாங்கத்திற்கும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற அழுத்தம் முன்னர் காணப்படாத நிலையில் தற்போது சமூக ஊடங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் காரணமாக இந்த விடயம் வீரிமயடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காதி நீதிமன்ற ஒழிப்பானது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய உரிமைகளில் ஒன்றாகும். இதில் வைப்பதானது சமூகத்தின் உரிமையில் கைவைப்பதாகும். இதனை எவ்வாறு இல்லாமலாக்க முடியும் என கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும், "முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் கட்டாயம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பெண்களின் திருமண வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்படுவதுடன், பெண் காதி நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்" என சட்டத்தரணி சபானா குல் பேகம் தெரிவித்தார்.
இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினை அண்மையில் சந்தித்து இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளனர்.
இவ்வாறு குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும் எனவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவர்களின் இந்த அழுத்தம் காரணமாக குறித்த சட்டத்தின் திருத்தப் பணிகளை சில மாதங்களுக்கு நிறுத்திவைக்குமாறு நீதி அமைச்சர் அலி சப்ரியினை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் மூலம் குறித்த சட்டத் திருத்தம் மேலும் இழுத்தடிப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இன்றைய நவீன காலத்திற்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதா சுமார் 60 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை.
மேலுள்ள அட்டவணையின் மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் https://bisthanbatcha.wordpress.com/2021/10/16/prevalence-of-child-marriage-in-sri-lanka/?fbclid=IwAR120nH_j_kBWpdwMRjzZaPoXavU0bV425jOhfNh3Q0LVLvQJNMXIt--WMI எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்து பெற்றக்கொள்ள முடியும்.
அதேவேளை, காதி நீதிமன்ற முறை என்பது முன்னோர்களினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாகும். எனினும், இந்த நீதிமன்ற முறையில் சில பலவீனங்கள் காணப்படுகின்றன. அவற்றினை திருத்தம் செய்து காதி நீதிமன்ற முறையினை பலப்படுத்த வேண்டுமே தவிர அதனை முற்றாக இல்லாமலாக்கக் கூடாது.
இந்தச் சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதை அனைத்து தரப்பினரும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த தரப்பினர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு குறித்த சட்டத்தில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அனைத்து தரப்பினரும் விட்டுகொடுப்பினை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதுவே இலங்கை வாழ் முஸ்லிம்களின் விருப்பமுமாகும்.
Comments (0)
Facebook Comments (0)