அம்பாறை வைத்தியசாலையில் இதய நோய் பிரிவு நிர்மாணம்

அம்பாறை வைத்தியசாலையில் இதய நோய் பிரிவு நிர்மாணம்

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் இதய நோய் பிரிவினை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அங்கீகாரத்தினை அமைச்சரவை நேற்று (06) திங்கட்கிழமை வழங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இதய நோய்களுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் இதய நோயால் இறக்கின்றவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, சிகிச்சை பெறுவதற்கு சமூகமளிக்கும் இதய நோயாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் சத்திரசிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக அம்பாறை பொது மருத்துவமனையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேவை காணப்படுகின்றது.

அதற்கமைய, அம்பாறை பொது மருத்துவமனையின் நீர்மமேற்று ஆய்வுகூடத்துடன் (Catheter Laboratory) கூடிய இதயநோய் பிரிவொன்றை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை தயாரித்து, நிர்மாணித்து, ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.