நிரபராதி என்றால் றிசாத் விடுதலை செய்யப்படுவார்: சரத் வீரசேகர

நிரபராதி என்றால் றிசாத் விடுதலை செய்யப்படுவார்: சரத் வீரசேகர

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"குற்றப்புலானய்வு திணைக்களத்தினாலேயே முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைதுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலில் பிரபல வர்த்தகர் இப்றாஹீமின் இரு புதல்வர்கள் முக்கிய பங்கேற்றிருந்தனர். இவர்கள் இருவரும் அடிப்படைவாதி சஹ்ரானுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகள் முடிவில் அவர் நிரபராதி என்றால் விடுதலை செய்யப்படுவார். அவ்வாறில்லாவிட்டால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என அமைச்சர் கூறினார்.