பேலியகொட மெனிங் சந்தை வளாகம் பிரதமரினால் திறப்பு
பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் நினைவு பலகையை திறந்து வைத்ததை தொடர்ந்து, சந்தை வளாகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து வளாகம் கௌரவ பிரதமரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
பல்வேறு வசதிகளை கொண்ட பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகள் கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கேற்ப துரிதப்படுத்தப்பட்டது.
நான்கு மாடிகளை கொண்ட பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் 03 மாடி வரை அமைந்துள்ள அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் மரக்கறி விநியோக லொறிகள் பயணிக்க கூடியவகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேடமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ப மேலும் பிரதான பல திட்டங்களை விரைந்து ஆரம்பிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் முன்வைத்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக தெரிவித்தார்.
இந்த சந்தை வளாகத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த மெனிங் சந்தை வளாகம் 13.5 ஏக்கர் பரப்பளவில் முழுமை பெற்ற மொத்த விற்பனை நிலைய வளாகமாகியுள்ளது. இதற்கான மொத்த செலவு 6.5 பில்லியன் ரூபாயாகும்.
அங்கு உரையாற்றிய பிரதமரின் முழுமையான உரை வருமாறு:
"பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தை திறந்து வைக்க கிடைத்தமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். கொவிட்-19 நிலைமைக்கு மத்தியிலும் நாம் எமது மக்களுக்காக செயற்படுத்தும் நாட்டின் அபிவிருத்திகளை ஒருபோதும் முடக்கவில்லை.
அதேபோன்று எவ்வாறான இக்கட்டான சூழ்நிலை ஏற்படினும் மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து அரசாங்கம் செயற்படும் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் நாங்கள் எடுத்த முக்கியமான முடிவுகள் இப்போது யதார்த்தமாகியுள்ளமை மகிழ்ச்சியான விடயமாகும்.
அன்று இதுபோன்ற அபிவிருத்தித் திட்டங்கள் சரியான நேரத்தில் தொடங்கப்படாவிட்டால், நம் மக்கள் இன்றும் பெரும் பாதிப்புகளுக்குள் சிக்கியிருப்பார்கள். எனவே உங்களை போன்று உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.
பரபரப்பான வாழ்க்கையில் நீங்கள் அனைவரும் வசதியான வாழ்க்கை முறையையே எதிர்பார்க்கின்றீர்கள் என நாம் அறிவோம். உங்களை போன்றே நீங்கள் வாழும் சுற்றுச்சூழலையும் வசதியான சூழலாக மாற்றுவதே எமது எண்ணமாகும்.
அன்று போன்று இன்றும் உங்களுக்கான சூழலை சரியான முறையில் திட்டமிட நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எடுத்துள்ளோம். கொழும்பு நகரில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்கு ஒரு தீர்வாகவே அன்று நாம் பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
அதேபோன்று மெனிங் சந்தை வளாகத்தின் ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மரக்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை விநியோகிப்பதற்கு முறையான மற்றும் வசதியான முறைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
மக்களின் வசதி போன்றே, மக்களின் தேவைகள் குறித்து சிந்தித்து, நாம் அன்று 2011ஆம் ஆண்டு கொழும்பு மீன் சந்தை வளாகத்தை பேலியகொடவிற்கு கொண்டு சென்றோம்.
தற்போதைய ஜனாதிபதி, அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக சேவையாற்றிய காலப்பகுதியில், அவரது ஆலோசனைக்கேற்ப மொத்த மீன் சந்தை வளாகத்தை திட்டமிட்டபடி நிறைவுசெய்து பொதுமக்களுக்கு கையளித்தோம்.
மொத்த மீன் சந்தை வளாகத்தை பேலியகொடவிற்கு கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே, கொழும்பு மரக்கறி சந்தை வளாகத்தை பேலியகொடவிற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. அதற்கமைய சந்தை வளாகத்தின் கட்டுமான பணிகளை 2013ஆம் ஆண்டு நாம் ஆரம்பித்தோம்.
இந்த சந்தை வளாகத்தில் 1,192 விற்பனை நிலையங்கள், 600 வாகனங்கள் நிறுத்த கூடிய வகையிலான வாகன தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான ஓய்வறை, வைத்திய முகாம், வங்கி, உணவகம், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை, ஹோட்டல் உள்ளிட்ட பல வசதிகள் காணப்படுகின்றன.
இச்சந்தர்ப்பத்தில், நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையிக் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்டோரையும் நினைவுகூற வேண்டும்.
அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டத்தின் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த முடிந்தது. இதனை நிர்மாணிப்பதற்கு எமக்கு 6.5 பில்லியன் ரூபாய் செலவானது.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் இதன் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டிருக்காவிடின், இது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டு வெகு காலமாகியிருக்கும் என்பதை குறிப்பிட வேண்டும்.
இந்த சந்தை வளாகத்தின் பணிகளை 2017ஆம் ஆண்டில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எமது அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை எமது அரசாங்கத்தினாலேயே திறந்து வைக்க கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
ஏனெனில், ஏற்கனவே இருந்த வர்த்தகர்களுக்கே அந்த விற்பனை நிலையங்களை எமக்கு வழங்க முடிந்தது. நாம் நிர்மாணித்ததை நாமே திறந்து வைத்தமையால் அது சாத்தியமாயிற்று. இன்றேல் கொழும்பு நகரில் நாம் அமைத்த தொடர்மாடி குடியிருப்பில் இரண்டு, மூன்று வீடுகளுக்கு ஒரே உரிமையாளளை குடியமர்த்தியது போன்றாகிவிடும். அதுபோன்றதொரு நிலைமையை ஏற்படுத்துவதற்கு நாம் தயாரில்லை.
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் இந்த சந்தை வளாகம் திறக்கப்பட்டிருப்பின், அவர்களது ஆதரவாளர்களுக்கு இந்த விற்பனை நிலையங்கள் வழங்கப்பட்டிருக்கும். நாம் ஆரம்பித்தமையால் அதன் பணிகளை முடக்கி நல்லாட்சி அரசாங்கம் பழிவாங்கியது. நண்பர்களே, அவர்கள் பழிவாங்கியது எம்மையா? அல்லது இந்த நாட்டையா? என்பது தற்போது உங்களுக்கு புரியும்.
மத்தல விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தினர். நாம் அமைத்த அனைத்திலும் பழிவாங்கினர். எமது பிள்ளைகளை பழிவாங்கினர். ஜனாதிபதி கோட்டாபய மீது வழக்கு தொடர்ந்தனர். பொலிஸ், சி.ஐ.டி., ஆணைக்குழுக்களில் வாக்குமூலம் வழங்க நேர்ந்தது.
நாட்டை விடுவித்து, யுத்தத்தை நிறைவுசெய்து, நாட்டை அபிவிருத்தி செய்தமையால் எம்மை பழிவாங்கினர். லலித் வீரதுங்க, அனூஷ பெல்பிட ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
அரச ஊழியர்களை பாராட்டுவதற்கு மாறாக நாட்டிற்காக சேவையாற்றிய அரச ஊழியர்களை சிறைப்படுத்தினர். நீதிமன்றத்தில் இன்று சுயாதீனம் உள்ளது. நாட்டின் அரச ஊழியர்கள் பணி புரிவதற்கு அஞ்சுகின்றனர். அமைச்சரொருவர் தீர்மானமொன்றை மேற்கொண்டவுடன், அரச அதிகாரிகள் பணியாற்ற அஞ்சுகின்றனர். சிறைக்கு செல்ல வேண்டுமோ? என்று இருமுறை சிந்திக்க வேண்டிய யுகமொன்று காணப்பட்டது.
கொழும்பு நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் பணியில், கொழும்பு மீன் சந்தை மற்றும் கொழும்பு மெனிங் சந்தை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இவற்றை பேலியகொடவுக்கு எடுத்துச் செல்வதே சிறந்த தீர்வாக இருக்கும் என்பதை நாங்கள் அப்போது உணர்ந்தோம்.
மீன் மற்றும் காய்கறிகளின் மொத்த வர்த்தகம் மட்டுமல்லாமல், புறக்கோட்டையில் முன்னெடுத்து செல்லப்படும் உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் மொத்த விற்பனையையும் எதிர்காலத்தில் மக்களின் வசதிக்காக பேலியகொடாவுக்கு நகர்த்துவோம்.
பேலியகொடா பரிமாற்றத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான அதிவேக நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுவதால், மிகவும் இலகுவாக இந்த பொருட்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு முடியும். இது கொழும்பின் புற பிரதேசங்களுக்கான போக்குவரத்திற்கும் வசதியாக அமையும்.
விமான நிலைய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை, வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அதிவேக நெடுஞ்சாலைகள் அனைத்துடனும் பேலியகொட இடமாற்றம் தொடர்புபடுகிறது.
அதனால் சரக்கு போக்குவரத்தை இலகுவாக நாடு முழுவதும் மேற்கொள்வதற்கும் இது ஒரு மையமாக விளங்கும். நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகவும், உங்களுக்கு வளமான எதிர்காலத்திற்காக வாழ்த்துவதாகவும்" பிரதமர் கூறினார்.
குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நகர அபிவிருத்தி, கரையோர கழிவுப்பொருள் அகற்றல் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான சிசிற ஜயகொடி, பிரசன்ன ரணவீர, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், கோகிலா குணவர்தன, நளின் பெர்னாண்டோ, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)