உள்நாட்டு அரிசியை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை: மஹிந்த
உள்நாட்டு அரிசியை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பதுளை - கலஉடகந்தே, கெதர பிரதேசத்தில் நேற்று (24) வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்துறையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை பெற்றுக் கொடுத்து உள்நாட்டு சந்தை போன்று சர்வதேச சந்தையையும் வெற்றிக் கொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் மூலம் விவசாயத்துறையில் ஈடுபடும் நபர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும். தமது அரசாங்கத்தின் கீழ் எப்போதும் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு எமது அரசாங்கம் தோல்வியடையும் போது மத்தல விமான நிலையத்தை நெல்லினால் நிரப்பும் அளவிற்கு நாட்டை தன்னிறைவடைய செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையில் விசேட திட்டங்கள் பல முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றியடைய செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவும்.
குரோட்டன் இலை, பலா இலை என்பவற்றை உண்ணுமாறு மக்களுக்கு கூறிய முந்தைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது போன்று, தமது அரசாங்கத்தின் கீழ் நாட்டை அனைத்து மட்டத்திலும் தன்னிறைவடையச் செய்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)