ஞானாசார தேரரின் கூற்று தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ACJU கோரிக்கை
தனியார் தொலைக்காட்சியொன்றில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்ச்சியில் தீவிரவாத தாக்குதல் பற்றி பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் விசேட அறிக்கையொன்றினை இன்று (16) வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர், 2021.09.13 ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்து இன்றைய பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஞானசார தேரரின் இக்கூற்றானது பொது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளையும், சவால்களையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.
எனவே, உரிய அதிகாரிகள் குறித்த தேரரின் கூற்று தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும் மிக அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
அத்துடன், குறித்த தேரர் இஸ்லாம் பற்றி முன்வைத்திருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாற்றுக்களுக்கான பதில்களை வெகு விரைவில் நாம் வழங்குவோம் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம்"என்றார்.
Comments (0)
Facebook Comments (0)