திகதி குறிப்பிடாது பொதுத் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை: பிரதமர்

திகதி குறிப்பிடாது பொதுத் தேர்தலை ஒத்திவைக்கும்  அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை: பிரதமர்

திகதி குறிப்பிடாது பொதுத்தேர்தலை ஒத்தி வைப்பதற்கான அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றினூடாக பிரதமர் இதனை தௌிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் தேர்தலை நடத்த முடியாமற் போனால், வேறொரு திகதியை தீர்மானிப்பது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

வாரங்கள் அல்லது மாதங்களின் பின்னர் தேர்தலை நடத்த முடியும் என்றாலோ, முடியாமற் போகும் என்றாலோ , அது தொடர்பான அனுமானங்களூடாக கட்டாயம் பின்பற்ற வேண்டிய சட்டங்களை புறந்தள்ள முடியாது எனவும் பிரதமரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

24/03 சரத்தின் கீழ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை சட்டத்திற்கமைய நிறைவேற்றிய பின்னர், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் காணப்படுமாயின் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கும் மே மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்ததாக பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.