சுதந்திர தின நிகழ்விற்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தமிழ் - சிங்கள மொழிகளில் தேசியக் கீதம் இசைக்கவும் ஏற்பாடு
கொழும்பு – 07 இலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 77ஆவது சுதந்திர தின நிகழ்விற்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றவுள்ள இந்த தேசிய நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசியக் கீதம் பாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த மற்றும் முப்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்றோர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"தேசிய மறுமலர்ச்சிகாக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளில் இந்த வருட சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்;க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மிகவும் எளிமையாக இந்த வருட நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்காக வேண்டிய வழமையாக காலி முகத்திடலில் இடம்பெறும் இந்த நிகழ்வினை இந்த வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
இந்த வருடம் 4,421 படையினர்கள் மாத்திரமே அணி வகுப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். கடந்த முறையினை விட இது மிகக் குறைவாகும். இதேவேளை, கடந்த முறை 19 ஹெலிகப்பட்டர்கள் சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த வருடம் 3 ஹெலிகப்பட்டர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்விற்காக பல வீதிகளை மூடமால் குறிப்பிட்ட சில வீதிகளை மாத்திரமே மூடத் தீர்மானித்துள்ளோம். பொதுமக்களின் நன்மை கருதியே இந்த அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின நிகழ்வு காரணமாக பொதுமக்களுக்கு சுமையினை ஏற்படுத்தக் கூடாது என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்" என்று குறிப்பிட்டனர்.
Comments (0)
Facebook Comments (0)