மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட வேண்டும்: ருஸ்தி ஹபீப்
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தொடர்பில் பொய்க் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்தமைக்காவே இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பலாங்கொட நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோருக்கு எதிராக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றாச்சாட்டொன்றினை முன்வைத்திருந்தார்.
எனினும் குறித்த குற்றச்சாட்டு பொய்யானது என இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த விளையாட்டு அமைச்சின் விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது. விளையாட்டு சட்ட மூலத்திற்கமைய விளையாட்டு தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைப்பவர்களுக்கு மூன்று வருட சிறைத் தண்டனை வழங்க முடியும்.
இந்த சட்ட மூலத்தின் கீழ் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயினை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)