மலையகத்தில் 10,000 இந்திய வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அண்மையில் கையொப்பமிட்டது.
இத்திட்டத்தினை அமுல்படுத்தும் நிறுவனங்களான தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) மற்றும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் கைச்சாத்திடப்பட்ட இந்த தனித்தனி ஒப்பந்தங்கள், 10,000 வீடுகளைக் நிர்மாணிக்கும் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
உயர் ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரியும் கவுன்சிலருமான எல்தோஸ் மத்தியூ புண்ணூஸ், இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவர் ரத்னசிறி களுபஹன மற்றும் NHDA பொது முகாமையாளர் கங்கனமாலகே அஜந்த ஜானக ஆகியோர் இந்த இரண்டு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.
இந்திய வீடமைப் புத்திட்டத்தின் நான்காம் கட்டம் இலங்கையின் குறித்த 6 மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கையில் மொத்தமாக 60,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதல் இரண்டு கட்டங்களில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டப் பகுதிகளில் மூன்றாம் கட்டமாக 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
மக்களை மையப்படுத்தி இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை திட்டங்களில் வீடமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கு புறம்பாக, இலங்கையின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு வீட்டுத் திட்டங்களின் கீழ் 2,400 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையுடன் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் பெறுமதியானது கிட்டத்தட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அடிப்படையிலானதாகும்.
Comments (0)
Facebook Comments (0)