நாளொன்றுக்கு உருவாக்கப்படும் 938 மெற்றிக் டொன் பிளாஸ்டிகில் 4 வீதம் மாத்திரமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்

நாளொன்றுக்கு உருவாக்கப்படும் 938 மெற்றிக் டொன் பிளாஸ்டிகில் 4 வீதம் மாத்திரமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தல்

எந்தக் கட்டுப்பாடும் இன்றி கழிவுப் பிளாஸ்டிக்கை தேவைக்கு அதிகமாக இறக்குமதி செய்ய தொழிற்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் நடத்திய கலந்துரையாடலில் தெரியவந்தது.

எனவே, எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கும்போது தொழில்துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குப் பணிப்புரை விடுத்தது.

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ அஜித் மான்னப்பெரும தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

வருடாந்தம் இலங்கைக்கு 4 இலட்சம் மெற்றிக்டொன் பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதி செய்யப்படும் நிலையில்,  வருடாந்தம் 20,000 மெற்றிக்தொன் கழிவுப் பிளாஸ்டிக்கை இறக்குமதிசெய்வதற்கு அனுமதி வழங்கப்படுகின்றமை இங்கு புலப்பட்டது.

கடந்த வருடத்தில் 20,000 மெற்றிக்டொன் கழிவுப் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், தொழில்துறையினால் 5,179 மெற்றிக்டொன் கழிவுப் பிளாஸ்டிக் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் இங்கு தெரியவந்தது.

எனவே, இவ்வாறான அனுமதியை வழங்கும்போது தொழில்துறையினரின் தேவையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் அனுமதியை வழங்குமாறும், குறிப்பிட்ட 5 ஆண்டுகளுக்குள் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக்கை சேகரிப்பதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், சராசரியாக நாளொன்றுக்கு 938 மெற்றிக்டொன் பிளாஸ்டிக் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இதில் 32 வீதம் மாத்திரமே மீள சேகரிக்கப்படுவதாகவும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் 4 வீதம் மாத்திரமே இயந்திரங்களின் ஊடாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுப்பொருளாக சூழலில் காணப்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மீள்சுழற்சிக்கான பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் காணப்படும் அதிக செலவீனம் காரணமாக அதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லையென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிளாஸ்டிக் சேகரிப்புக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை அதிகரிப்பதன் ஊடாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், உத்தேச சுற்றாடல் சட்டமூல வரைபை விரைவில் நிறைவுசெய்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.   

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.