கிழக்கே ஓர் அஸ்தமனம்
1961 இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது.
அறுபது வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டபோது அங்கு ஏறக்குறைய ஒரு இலட்சம் முஸ்லிம் மக்களும் அறுபதினாயிரம் சிங்கள மக்களும் ஐம்பதினாயிரம் தமிழ் மக்களும் இருந்தனரெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இறுதியாக 2012 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை புள்ளிவிவரப்படி இங்கே முஸ்லிம்களின் தொகை மூன்றுமடங்கு ஆகியுள்ளதுடன் சிங்களவர்களின் தொகை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருக்கும் அதேவேளை, தமிழர்களின் தொகையானது சுமார் இரண்டு மடங்கு வரையான அதிகரிப்பையே கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்துக்கான ஏழு ஆசனங்களில், ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மொத்த வாக்காளர் தொகையில் ஏறக்குறைய எண்பதாயிரம் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தமிழர்களால் தற்போதுள்ள ஓர் ஆசனத்தைக் கூடத் தக்கவைத்துக் கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதற்குப் பிரதான காரணமாக இம்முறை அம்பாறையில் ‘அகில இலங்கை தமிழ் மகாசபை’ கட்சியில் களமிறங்கியிருக்கும் ‘கருணா அம்மான்’ என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முன்னாள் பிராந்தியப் பொறுப்பாளராக இருந்தவரும் முன்னாள் அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் முன்னெடுக்கும் சுயபிரஸ்தாப மற்றும் இனமுறுகலை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பிரசாரங்களும் அடாவடித்தனமான செயற்பாடுகளும் காணப்படுகின்றன.
கல்முனை தமிழ் பிரதேச செயலகமானது முழுமையான அதிகாரங்களைக் கொண்டதொரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படுவதில் காணப்படும் தேவையற்ற இழுத்தடிப்புகள் தொடக்கம் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழர்களும் தமிழ்ப் பிரதேசங்களும் புறக்கணிக்கப்படுவது வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இயலாமை மீதான தமிழ் மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.
தற்போது 29 கிராமசேவக பிரிவுகளைக் கொண்டிருக்கும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரமானது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திடமே இதுவரை காலமும் இருந்து வருகிறது.
இதனைத் தரமுயர்த்தித் தரும்படியான பலவருடகால மக்களின் கோரிக்கையானது முஸ்லிம் பிரதிநிதிகளின் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக இதுவரை செயற்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாகச் சென்ற வருட மத்தியில் கல்முனையில் இடம்பெற்ற பாரியதோர் ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் முகமாக, அப்போதைய அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் உலங்கு வானூர்த்தியில் அவசரவசரமாகப் பயணித்து, பிரதமர் ரணில் வழங்கிய உறுதிமொழிச் செய்தியை மக்களிடம் வாசித்துக் காட்டிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் மீது செருப்பெறிதல் இடம் பெற்று மக்களால் துரத்தப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது கூட்டமைப்பை அவமதிக்கும் நோக்குடன் சில சக்திகளால் சோடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டாலுமே தமது பிரதிநிதிகள் மீது மக்கள் கொண்டிருந்த கோபத்தையும் அதிருப்தியையும் நம்பிக்கையின்மையையுமே இச்சம்பவம் வெளிக்காட்டுகிறது.
இதன் பின்னராவது மக்களது நம்பிக்கையை மீட்டுக் கொண்டுவரும் முகமாகத் தாம் அதுவரை முட்டுக் கொடுத்துக்கொண்டிருந்த அரசிடம் கெஞ்சிக் கூத்தாடி குறைந்தது இப் பிரதேச செயலகத்தையாவது கூட்டமைப்பினர் மீட்டெடுத்திருக்கலாம்.
ஆளும் கட்சியுடன் இணைந்திருந்து இதைக் கூடச் செய்ய முடியாதவர்கள் இனிவரப்போகும் ஆட்சியில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்துகொண்டு எதைக் கிழிக்கப்போகிறார்கள் என்பது தான் இந்த மக்கள் மத்தியில் காணப்படும் இன்றைய பிரதான கேள்வியாக இருக்கிறது.
இருப்பினும் கூட்டமைப்புக்கு மாற்றீடாகத் தன்னை முன்னிறுத்தும் கருணா அம்மான் கூட, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இம் மக்களுக்கு எதைப் பெரிதாகச் செய்துவிட்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழாமலில்லை.
அமைச்சராக கருணா அம்மான் இருந்த காலப்பகுதியில் கூடக் காணப்பட்ட இந்தக் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தைத் தற்போது கூட்டமைப்பினர் தமது தேர்தல் பிரசார உத்தியாக எடுத்துக்கொண்ட பின்னரே தானும் முக்கியத்துவம்கொடுத்துப் பேசத்தொடங்கியிருக்கிறார்.
இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த கட்சிகளுக்கும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான கூட்டமொன்றில் ‘நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தாருங்கள்’ என்று கருணா கேட்டிருக்கிறார். ஆனால், அங்கே கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கமைய இந்தக் கோரிக்கை மீண்டும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர, கருணா தனது பிரசாரங்களில் சொல்வதைப் போல, மண்முனைப் பாலம் கட்டியது என்பது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் ஏற்கெனவே இருந்த ஒன்று. அடுத்து, நான்காயிரம் வேலைவாய்ப்புகளைக் கொடுத்திருப்பதாகக் கூறுவது பற்றியும் சரியான தகவல்களைப் பெற முடியவில்லை.
எனினும் சமீபத்தில் அம்பாறை நுழைவாயில் எல்லையிலிருந்த ஹரீஸின் பதாகையை இடித்து விழுத்தியதன் மூலமாக இரவோடிரவாக இளைஞர் மத்தியில் ஹீரோவாக இடம்பெறுவதற்கு முயன்றிருக்கிறார். அது தக்க பலனையும் கருணா அம்மானுக்குத் தந்திருப்பதாகவே தற்போதைய நிலைவரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையை முற்றிலும் எதிர்ப்பதாகத் தமது பிரசாரங்களில் வரிக்குவரி சொல்லித் திரியும் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கூட 2005இல் அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் சந்திரநேருவை கிழக்கின் அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட மேலும் நான்கு விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் சேர்த்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கருணாவுடன் நேரடியாக மோதுவதற்கு அச்சப்படுபவர்களாகவே காணப்படுகின்றனர்.
எனவே, தற்போதைய நிலையில், கருணாவின் பிரசார வாகனத்துக்கடியில் ஹரீஸின் பதாகையுடன் சேர்ந்தே நொறுங்கி அப்பளமாகப் போயிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறைத் தொகுதியை மீட்டெடுத்து ‘சேலைன்’ ஏற்றி உயிர்ப்பிப்பதற்கிடையில் இந்தத் தேர்தலே முடிந்து விடப் போகிறது.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் கூட்டமைப்பின் தலைமைகள் அதிக அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்குத் தத்தமது இடங்களில் தத்தமது ஆசனங்கள் பாதுகாக்கப்பட்டால் போதுமானது. மற்றைய இடங்களிலிருந்து கிடைக்கும் ஆசனங்கள், அதிலும் குறிப்பாக அம்பாறையிலிருந்து கிடைக்கப்போகும் ஒரேயோர் ஆசனம் என்பது வெறும் உபரியே தவிர, தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான அந்த மக்களின் வாழ்வா சாவாப் போராட்டம் என்று குறித்த தலைமைகள் சரிவர உணரவில்லை என்பதையே கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் காட்டுகின்றன.
அப்படி உணர்ந்துவிட்டாலுமே எதைச் செய்துவிடுவார்கள் என்பது அடுத்த கேள்வி. ஒரு காலத்தில் கிழக்கையும் தமது சொந்தப் பிரதேசமாகவே கருதித் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னிலையில் நின்று உத்வேகத்துடன் பேசக்கூடிய துணிச்சல்மிக்க அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இன்று தலைமையில் இல்லை என்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவே.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் தான் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாகக் களமிறங்கியிருக்கும் அம்பாறை மாவட்டத் தமிழ் வேட்பாளரான வினோகாந்த் என்பவர் தனது ஆதரவாளர்களிடம் ‘எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, கருணாவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம். அதற்குப் பதிலாகக் கூட்டமைப்புக்கோ அல்லது வேறொரு தமிழ் வேட்பாளருக்கோ உங்களது வாக்கைப் போடுங்கள்’ என்று குறிப்பிட்டிருப்பதாக அறியமுடிகிறது.
தமது சொந்தக் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்னொரு தேசிய கட்சியிலிருந்து கொடுக்கப்படும் இந்த ஆதரவுக் குரலைக் கேட்டு ஆறுதல் படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்று ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸின் துணையுடன் சஜித் இரண்டு ஆசனங்களையும் உறுதியாகப் பெற்றுக்கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், மீதி இரண்டு ஆசனங்களில் ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
எனவே, இறுதியாக மிஞ்சப்போகும் அந்த இன்னோர் ஆசனத்தைப் பெறுவதற்காகத் தான் முப்பத்தைந்து சுயேச்சைக் குழுக்களும் நான்கு பிரதான தமிழ்க் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் மகாசபை போன்றவை அடிபடப் போகின்றன.
இதே நேரத்தில் இம்முறை தேசிய காங்கிரஸில் போட்டியிடும் அதாவுல்லாஹ் பெறப்போகும் வாக்குகளும் கணிசமானளவாக இருக்கும். இவை தமிழ் வாக்குகளாக இல்லாத போதிலும் தமிழர் மத்தியில் பல்வேறு கட்சிகளுக்காகச் சிதறுபடப்போகும் வாக்குகள் இவருக்கான ஆசனத்தை முஸ்லிம் மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தக்கூடிய சாத்தியக்குறுகளே அதிகம்.
இவர் 2000 முதல் 2015 வரை அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது தொகுதியான அக்கரைப்பற்றில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களும் உருவாக்கிய வேலைவாய்ப்புகளும் குறிப்பிட்டளவு வாக்காளர்களைத் தன்பக்கம் இழுக்கக்கூடியவையாக அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக, 1940இல் உருவாக்கப்பட்ட திருகோணமலை நகரசபையானது மாநகர சபைக்கான சகல தகுதியைக் கொண்டிருந்தும் அதனைப் புறம்தள்ளி வைத்துவிட்டு, அக்கரைப்பற்று பிரதேச சபையை, நகரசபையாக்கும் தேவையின்றி நேரடியாகவே 2011இல் மாநகர சபையாக மாற்றியது முதற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளைத் தனது தொகுதிக்காகப் பலரது எதிர்ப்புகளையும் மீறித் துணிந்து செய்திருக்கிறார்.
ஆனால், இதே திருகோணமலையிலிருந்து தெரிவு செய்யப்படும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களோ கையில் கிடைத்த பொன்னான வாய்ப்பான கிழக்கு மாகாணசபையைக் கூட நல்லெண்ண அடிப்படையில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு ‘அடுத்த தீபாவளிக்குத் தீர்வு வரும்’ என்று காத்துக்கொண்டிருக்கிறார்.
இதே போலவே சென்றமுறை கூட்டமைப்பின் வசம் இருந்த அம்பாறையின் நாவிதன்வெளி பிரதேச சபையை, இம்முறை தேர்தலிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையே அதிகமாகப் பெற்றிருந்தும் கூட சுயேச்சைக் குழுவில் வெற்றிபெற்றிருந்த மூன்று தமிழ்ப் பிரதிநிதிகளிடம் பேரம்பேசத் தெரியாமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், அதனை முஸ்லிம்களிடம் தூக்கிக் கொடுத்துவிட்டதாக கருணா குற்றம் சாட்டியிருக்கிறார்.
இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் மூலமாக கூட்டமைப்பினர் மக்களுக்குச் சொல்லவருவது ஒன்றே ஒன்றுதான், ‘தமிழ் மக்கள் எமக்கு அறுதிப் பெரும்பான்மை அளிக்காவிட்டால் நாம் ஆட்சியமைக்க சக தமிழ் பிரதிநிதிகளிடம் போய்க் கெஞ்சிக் கொண்டிருக்கப் போவதில்லை.
மாறாக இன்னொரு சமூகத்திடம் எமது அதிகாரங்களை ஒப்படைத்துவிடுவோம்’ என்பதைத் தான். இது தமிழ் மக்கள் மீது அவர்களின் ஏக பிரதிநிதிகளாக வர நினைப்பவர்கள் வைக்கும் மறைமுக மிரட்டல் அல்லது முறையற்ற அழுத்தம் ஆகும்.
இங்கே இனவாதம், பிரதேசவாதம் பேசுவதற்கு எதுவுமில்லை. இருப்பினும் தமக்கு மிஞ்சியது தான் தானமாக இருக்கவேண்டும் என்பதை உணராததன் காரணமாகச் சொந்த வீட்டிலேயே பிச்சையெடுக்கும் நிலைக்கு இன்று கூட்டமைப்பினர் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அஷ்ரபினால் ‘முஸ்லிம் காங்கிரஸ் கட்சி’ உருவாக்கப்படும் வரை கிழக்கில் முஸ்லிம்களின் கணிசமானளவு பிரதிநிதித்துவம் தமிழரசுக்கட்சியின் மூலமாக இருந்திருக்கிறது. குறிப்பாக, 1947 முதல் 1989 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்குள் பல முஸ்லிம்கள் தமிழரசுக் கட்சியில் தனித்துப் போட்டியிட்டு 1956 முதல் 1970 வரை தொடர்ச்சியாக வெற்றிபெற்றும் இருக்கிறார்கள்.
2010இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து ‘பொடியப்புகாமி பியசேன’ என்ற ஒரு சிங்களவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமை கூட தமிழரசுக்கட்சிக்கு உண்டு. ‘பியசேன’ தனது தாய்வழி தமிழராக இருப்பினும் வெற்றி பெற்றவுடனேயே தேசிய கட்சிக்குத் தாவிச் சென்றுவிட்டதைப் பலரும் அறிவார்கள்.
இத்தகைய பல்லின சகிப்புத்தன்மை கொண்ட கட்சியில், 1979இல் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட தமிழரான ‘செல்லையா இராஜதுரை’ துரோகியாகக் கருதப்படுகிறார். இவர் 2012இல் தந்தை செல்வாவின் 35ஆவது நினைவு நாளுக்கு வருகை தந்திருந்தபோது சிவாஜிலிங்கம் குழுவினரால் செருப்பால் அடித்துத் துரத்தப்பட்டதாகக் கருணா சொல்லியிருக்கிறார்.
ஆனால், சிவாஜிலிங்கம் தாம் கறுப்புக்கொடி காட்டி மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று கூறியதுடன் மேலும் ‘மாவீரர்கள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவுநாளுக்கு கருணாவை அழைப்பது எவ்வளவு தவறோ அவ்வாறானதே இராஜதுரையை தந்தை செல்வாவின் நினைவுநாளுக்கு அழைப்பதும்’ எனவும் தெரிவித்திருந்தார்.
தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்திலிருந்து தனது வெளியேற்றம் வரை கட்சிக்காக அயராது பாடுபட்டவரும் தமிழரசுக் கட்சியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்து முறை நாடாளுமன்றத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டவருடைய பிளவுதான் கிழக்கிலிருந்து போடப்பட்ட முதல் பிளவு எனக் கருத இடமுண்டு.
அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவின் பிரிவும் துரோகத்தனமாகவும் மன்னிக்க முடியாததாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டாலுமே கிழக்கில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் ஆறாயிரம் பேர் இன்னும் உயிருடன் இருப்பதற்கு விடுதலைப் புலிகளுடனான தனது பிளவுக்கான முடிவே காரணம் என்று கருணா பறைசாற்றிக்கொள்ள முடிகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுப்பவர்கள் இன்றும் எம் மத்தியில் கணிசமானளவு இருப்பதைப் போலவே கருணா அம்மானை விரும்புபவர்களும் கூடக் கணிசமானளவு இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், கருணா அரசியலில் இறங்க உதவியது அப்போதைய அரசாங்கமாக இருந்தாலும், இன்று அம்பாறையில் இவ்வளவு தூரம் துணிந்து உள் நுழைந்து தனது கட்டுப்பாட்டில் முழுதாகக் கொண்டுவருவதற்கு முயல்வது கூட்டமைப்பின் பலவீனம் மட்டுமே ஆகும். எமது ‘உலகப்புகழ்’ அப்புக்காத்துமார் யாரும் தனது அடாவடித்தனங்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகமாட்டார்கள் என்ற துணிச்சல் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
சமீபத்தில் கருணா, ஒரு பிரசாரக் கூட்டத்தில் ‘போரின்போது ஓர் இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களைக் கொன்றிருக்கிறேன்’ என்று மார்தட்டிச் சொல்லிவிட்டும் எவ்வித சட்டச் சிக்கலுமின்றி சுதந்திரமாக நடமாடமுடிகிறது என்றால் கருணாவுக்கு இன்னும் மறைமுக பலமாக இருக்கும் அரச ஆதரவைப் புரிந்துகொள்ள முடியும். இருப்பினும் தமது அரசாங்கத்தில் தமது கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவியிலிருந்த ஒருவரை இப்போது தமது சொந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வைக்காமல் தனியே நிறுத்தியிருப்பதற்குப் பின்னாலிருக்கும் இராஜதந்திரம் அவரை வெல்ல வைப்பது என்பதைவிட நிச்சயமாக தமிழர் வாக்குகளைப் பிரிப்பதற்கான சதியாகவே கருத முடிகிறது.
அது மட்டுமன்றி, கட்சியில் கருணாவைத் தவிர வேறொருவரும் பெரும்பாலானோர் அறியப்படாதவர்களாக இருப்பதுவும் அவர்களை முன்னிலைப்படுத்திப் பெரியளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படாமையும் இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
எனவே, இம்முறை ஆரம்பம் முதலே தனது வழமையான பாணியிலான அடாவடித்தனத்தைக் கையிலெடுத்தவாறு தேர்தல் களத்தில் நுழைந்து மக்களின் மத்தியில் பாரியதொரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கருணாவின் வரவானது அம்பாறையில் அவரது வெற்றியில் முடிகிறதா அல்லது தமிழர்களிடமிருந்த ஒரேயோர் ஆசனமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆசனத்தையும் கபளிகரம் செய்து வேறொரு சமூகத்தினரிடம் கொடுப்பதில் முடியப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி: தமிழ்மிரர்
Comments (0)
Facebook Comments (0)