அடிப்படை உரிமையை மீறும் இணையத்தள சட்டமூலம்
றிப்தி அலி
உலகளாவிய ரீதியில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இணையத்தளங்களும், சமூக ஊடகங்களும் இன்று மாறியுள்ளன. இவற்றினால் நன்மைகளும் தீமைகளும் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் அவரவர் பயன்படுத்துவதினைப் பொறுத்தே இவை தீர்மானிக்கப்படுகின்றன.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்த சமூக ஊடகங்கள் பிரதான பங்காற்றின. இது போலவே மத்திய கிழக்கின் சில நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தத்திற்கும் சமூக ஊடகங்களே பிரதான பங்கு வகித்தன.
இவ்வாறு செல்வாக்கு மிக்கதாக காணப்படும் இந்த சமூக ஊடகங்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாரிய நெருக்கடிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. இதனால், 'சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தல்' எனும் போர்வையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த பல நாட்டு அரசாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.
எனினும், இவை அனைத்தும் பேச்சுச் சுதந்திரத்தினை கட்டுப்படுத்துவதாகவே காணப்படுகின்றன. இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் தற்போது இணையத்தள பாதுகாப்பு சட்டமொன்றினை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட இந்த சட்ட மூலம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும், சிவில் உரிமைகளைப் பேணும் அழைப்புக்கள் மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்புக்கள் ஆகியன மத்தியில் குறித்த சட்டமூலம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தினந்தோறும் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், ஊடக அமைப்புக்கள் எனப் பல தரப்பட்ட அமைப்புக்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன.
இதற்கு மேலதிகமாக பல சர்வதேச அமைப்புக்களும் இந்த சட்ட மூலத்திற்கு எதிரான கண்டங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் மக்களின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரம் இல்லாமலாக்கப்படும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அது மாத்திரமல்லாது, சிந்தனைச் சுதந்திரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்றதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலேயே இந்த இணையப் பாதுகாப்பு சட்ட மூலம் கொண்டுவரப்படுவதாக சிவில் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அத்துடன் மாற்றுக் கருத்து கொண்டவர்களை ஒடுக்கவும் இந்த சட்டமூலம் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இணையத்தள பாதுகாப்பு ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பது, சில தொடர்பாடல்களை தடைசெய்வது, தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக இணையத்தள கணக்குகள் மற்றும் போலி இணையத்தள கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இந்த சட்டமூலம் உள்ளடங்கியுள்ளது.
இலங்கையில் சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வந்தவர்களும் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அந்தளவிற்கு இந்த சட்டமூலம் பாரதூரமானதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐவரடங்கிய ஆணைக்குழுவினால் எந்த அடிப்படையில் பதிவொன்றினை போலியானது என அடையாளப்படுத்த முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
தனியுரிமை, தனிநபர்களின் பாதுகாப்பு, தனிப்பட்ட தகவல் என்பவற்றைப் பற்றிய மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள கண்காணிப்பு என்பன பற்றிய ஆதங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சட்டமூலம் பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கின்றது.
இந்த சட்டமூலத்தின் தற்போதைய வடிவம் அலுவலக இணையதள செயற்பாடுகளை தணிக்கை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்றவைகளுக்காக அதற்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை கொண்டுள்ளதாக தெரிய வருகினற்து.
சுயாதீன மேற்பார்வை பொறிமுறையொன்று இந்நகலில் உள்ளடக்கப்படாமை காரணமாக அரசாங்கம் - இணையதள அமைப்புகள் மற்றும் உள்ளடக்க விடயங்களின் அவதானிப்பு என்பவற்றை கண்காணித்தல் ஊடாக தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
கருத்து வேறுபாடு மற்றும் அபிப்பிராய பேதம் என்பவற்றை அடக்குதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தல், அரசியல் செயற்பாடுகளை திணறடிக்க செய்தல் மற்றும் விமர்சனத்தை கட்டுப்படுத்தல் போன்ற தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சட்ட மூலம் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு ஒரு கருவியாக செயற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இவற்றினால் குறித்த சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, சிவில் சமூகத்தினர், டிஜிட்டல் உரிமை பாதுகாப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய தரப்பினருடன் இந்த சட்டமூலம் தொடர்பில் ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டு இணையதள பாதுகாப்பு, கருத்து வெளியிடல் சுதந்திரம் உள்ளிட்ட சகல அடிப்படை மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஐசீசீபீஆர் சட்டம் இலங்கையில் மிகவும் மோமசான முறையில் பயன்படுத்தப்படுகின்ற பின்னணியில் இந்த உத்தேச சட்டமூலம் அமுல்படுத்தப்படுமாயின் சமூகத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் இந்த சட்டமூலத்தினை பயன்படுத்துவற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சர்வதேச சமூக ஊடக நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டினை மேற்கொள்ளமாட்டாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ்வாறான நிலையில், கடந்த மாதம் அமெரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பேஸ்புகின் தாய் கம்பனியான மீடாவின் உயர் அதிகாரியொருவரை சந்தித்து இந்த சட்டமூலம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தினால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்த சட்டமூலம் குறித்து இதுவரை எந்தவொரு சமூக ஊடக நிறுவனங்களும் கருத்து வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் தற்போது அமுல்படுத்தப்படுகின்ற இணையத்தளம் தொடர்பிலான சட்டத்தினால் அங்கு சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது பாரியளவில் சர்ச்சையினையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையெத்த சட்டமே இலங்கையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த சட்டமூலத்தினை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
அது மாத்திரமல்லாமல், இந்த சட்டமூலம் தொடர்பில் ஏழு பரிந்துரைகளை உள்ளடக்கிய கடிதமொன்றினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல சர்சைகளை கொண்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, ஜீ.எல். பீரிஸ் ஆகியோரும் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், பொதுமக்களின் அடிப்படை உரிமையினை மீறும் இந்த சட்டமூலத்தினை சில திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஆளும் தயாராகும்,
அவ்வாறு திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் பொதுமக்களின் அடிப்படை உரிமையில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை.
இதனால், அனைத்து மக்களும் ஒன்றிணைந்து குறித்த சட்டமூலத்தினை அரசாங்கம் வாபஸ் பெறுவதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
Comments (0)
Facebook Comments (0)