போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய தலைமுறையினரை மீட்போம்: மஹிந்த

போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய  தலைமுறையினரை மீட்போம்: மஹிந்த

போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைய தலைமுறையினரை மீட்க வேண்டுமாயின் முதலில் பாதாள உலகக் குழுவினரை இல்லாதொழிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து மீட்பதற்கு பாதாள உலகக் குழுவினரை முறையாக இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குருநாகல் மாவட்டத்தில் பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசத்தில்நடைபெற்ற சந்திப்பின்போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிராம மட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையாகும் நிலை காணப்படுவதால் சில குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட்டு போதைப்பொருள் அவர்களது கைகளை சென்றடைவது எவ்வாறு என்பதை ஆராய்ந்து பார்ப்பது பெரியோரின் கடமை என்று இதன்போது பிரதமர் தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பொதுமக்களின் நன்மை கருதி எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் ஆரம்பிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்காத பாராளுமன்றமொன்று இம்முறை பொதுத் தேர்தலில் உருவாக்கப்படின் எதிர்காலத்திலும் மக்களுக்காக சேவை செய்வதற்கு எவருக்கும் முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

அதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் அங்கீகரித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச் செய்யுமாறு பிரதமர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.