ஜமாதே இஸ்லாமி, பொதுபலசேனா, தௌஹீத் கொள்கை உடைய அமைப்புகளை தடை செய்யுமாறு பரிந்துரை
பொதுபலசேனா, ஸ்ரீலங்கா ஜமாதே இஸ்லாமி, அதன் மாணவர் அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் தௌஹீத் கொள்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் ஆகியவற்றினை தடை செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலேயே இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாசிப்பிற்காக குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பரிந்துரைகள்:
1. வஹாபிஸம் தடை செய்யப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய அனைத்து தௌஹீத் அமைப்புக்களும் தடை செய்யப்பட வேண்டும்
2. PEACE TV தடை செய்யப்பட வேண்டும்.
3. தொலைக்காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளி, ஒலிபரப்பப்படும் அனைத்து சமய நிகழ்ச்சிகளும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும்.
4. பொது இடங்களில் முகத்தினை மூடும் ஆடைகள் அணிவது தடை செய்யப்பட வேண்டும்.
5. பொதுபலசேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்
6. ஸ்ரீலங்கா ஜமாதே இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்பு ஆகியன தடை செய்யப்பட வேண்டும்
7. சமய அடையாளங்களுடனான அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்
8. அனைத்து பிரஜைகளும் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்
9. அரச புலனாய்வு பிரிவில் சர்வதேச ஆய்வு பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்
10. பாதுகாப்பு அனுமதியின்றி வெளிநாட்டவர்களை உள்நாட்டில் வேலைக்கு அமர்த்த முடியாது
11. சமய அடிப்படைவாத்தினை தடுக்க சமூக ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)