கல்முனையில் காணிப் உறுதிப் பதிவின் போது இன ரீதியில் பகுப்பு
தகவறியும் விண்ணப்பத்தின் ஊடாக வெளியானது
றிப்தி அலி
இன ரீதியாக பிரதேச செயலகங்களை பிரித்து காணி உறுதிகள் பதிவு செய்யும் நடவடிக்கை கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் ஊடாகவே இந்த விடயம் தெரியவந்தது.
இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக எந்தவொரு பிரஜையும் ஓரங்கட்டுதல் ஆகாது என இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் 2ஆவது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கல்முனை பிரதேச செயலகம் இன ரீதியாக 'கல்முனை முஸ்லிம்' மற்றும் 'கல்முனை தமிழ்;' பிரதேச செயலகங்கள் என பதிவாளர் திணைக்களத்தின் கீழுள்ள கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தினால் பிரிக்கப்பட்டு காணிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
1978.08.01ஆம் திகதியிலிருந்து செயற்படும் கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தில் - அசைவற்ற, அசைவுள்ள சட்ட ஆவணங்களை பதிவுசெய்தல், அவ்வாறான ஆவணங்களை பாதுகாத்தல், தேவைப்படும் போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இங்கு கரைவாகுபற்று, நிந்தவூர் பற்று, சம்மாந்துறை பற்று, அக்கரைப்பற்று ஆகிய நான்கு பற்றுகளின் கீழ் காணிப் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பதிவாளர் நாயகத்தினால் 2012.12.21ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், 2013.01.01ஆம் திகதியிலிருந்து பிரதேச செயலகங்கள் வாரியாக பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.
பதிவாளர் திணைக்கள உயர் அதிகாரிகளுடன் காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட கூட்டத் தீர்மானங்களின் படி, பிரதேச செயலக மட்டத்தில் பதிவுப் பிரிவினை நிர்ணயிப்பதற்கு அனுமதிக்கக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
"இதற்கமைய, கல்முனை முஸ்லிம் பிரிவு, கல்முனை தமிழ் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நாவிதன்வெளி, இறக்காமம், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்களின் காணிப் பதிவுகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன" என கல்முனை காணிப் பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளருமான ஐ.எம். பாயிஸ் தெரிவித்தார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்திற்கு கடந்த ஜனவரி 13ஆம் திகதி வழங்கிய பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அம்பாறை மாவட்டத்தில் 'கல்முனை முஸ்லிம்', 'கல்முனை தமிழ்' என்ற பிரதேச செயலகங்கள் எதுவுமில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த இராஜாங்க அமைச்சிற்கு மேற்கொள்ளப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு இராஜாங்க அமைச்சின் நிர்வாகத்திற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் கே.ஜி. விஜயசிறியினால் கடந்த மார்ச் 19ஆம் திகதி வழங்கப்பட்ட தகவலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சட்டவிரோதமாக 'கல்முனை முஸ்லிம்' மற்றும் 'கல்முனை தமிழ்;' பிரதேச செயலகங்கள் என காணிப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையினை கல்முனை காணி மற்றும் மாவட்ட பதிவகத்தினால்; மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கான அனுமதியினை பதிவாளர் திணைக்களமும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)