மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு  3,400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரான பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் நிறுவன கட்டுமானங்கள் நேரடி ஒப்பந்த அடிப்படையில் அரச கட்டுமான நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

தம்பானே பழங்குடியினருக்கு சொந்தமான, ஐக்கிய இராச்சியத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களது மண்டைஓடுகள் மீண்டும் பழங்குடி மக்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலஅத்தனவுக்கு வழங்கும் நடவடிக்கை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இடம்பெற்றது.

அதற்கமைய தொல்பொருள் மதிப்புவாய்ந்த, பழங்குடி மக்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் இந்த எலும்புகூடுகளை வைப்பதற்கு கலைக்கூடமொன்றை நிறுவுவதற்கு மத்திய கலாசார நிதியத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் இதன்போது பிரதமர் அறிவுறுத்தினார்.

2021ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கான 3,400 மில்லியன் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்வதும் இக்கூட்டத்தின் போது இடம்பெற்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் (சட்டம்) கணேஷ் தர்மவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டிஆராச்சி, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.