மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி நதாவிற்கு தேசிய ரீதியில் முதன்மை விருது
கொழும்பு பத்தரமுல்ல 'அபேகம' வளாகத்தில் கல்வி அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தொழில்நுட்ப புத்தாக்க போட்டியில் தேசிய ரீதியாக கல்விப் பிரிவின் பெண் மாணவர்களுக்கான (Education theme Women Award winner) விருதினை கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய பாடசாலை முதலாமிடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பாடசாலையின் தரம் 10ல் கல்வி கற்கும் சாய்ந்தமருதினைச் சேர்ந்த பாத்திமா ஸூஹ்றா நதாவினால் முன்வைக்கப்பட்ட புத்தாக்கத்திற்காக இவ்விருதினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவ்வருடம் கல்முனை வலய மட்டத்தில் நடைபெற்ற பிராந்திய ரீதியான புத்தாக்கப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இவரது காபன் தடய கையடக்க செயலி, மாகண மட்ட போட்டிக்கு சிபாரி செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்ட இம்மாணவியனது ஆக்கம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
கொழும்பு வத்தரமுல்லையில் கல்வி அமைச்சின் தொழில்நுட்ப பிரிவினால் நடைபெற்ற தேசிய புத்தாக்க நிகழ்விலே இவரது ஆக்கம் பெண் மாணவர்களுக்கான புத்தாக்கத்தில் முதன்மையானதாக தெரிவு செய்யப்பட்டு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இப்பதக்கத்தினை கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தரவினால் இப்பதக்கம் கல்வி அமைச்சினால் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் தொழில்நுட்பம் சுற்றுலாத்துறை சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய 5 துறைகளில் நடைபெற்ற இப்போட்டியில், ஒவ்வொரு துறையிலும் தேசிய ரீதியாக ஒரு பெண் மாணவி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதில் கல்வி துறையில் பெண் மாணவர்களுக்காக வழங்கப்பட்ட வெற்றியாளர் விருதினை மாணவி ஸூஹ்றா நதாவினால் முன்மொழியப்பட்ட காபன் தடய செயலி மற்றும் வெப்தளம் பெற்றுக்கொண்டது.
2023ஆம் மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (SLAASCOM) தேசிய புத்தாக்க சிந்தனைகளுக்கான விருதுகளில் மென்பொருள் உருவாக்கங்களுக்காக நடைபெற்ற போட்டிகளிலும் இம்மாணவி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)