பாராளுமன்றத் தேர்தல் 2024: சில அவதானிப்புகள்

பாராளுமன்றத் தேர்தல் 2024: சில அவதானிப்புகள்

கலாநிதி. இரா. ரமேஷ்
அரசியல் விஞ்ஞானத்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்.

சி. விதுர்ஷன்
அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத் துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியினை தேசிய மக்கள் சக்திப் பெற்றுள்ளது. 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி தெளிவான 2/3 பெரும்பான்மையினைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் 42.31 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்றத் தேர்தலில் 61.56 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஆறு வாரங்களில் ஏற்பட்ட 12 சதவீத அதிகரிப்பாகும். இந்த  வெற்றிக்கு அரகலய எனும் மக்கள் போராட்டத்தின் பங்களிப்பு காத்திரமானதாகும். காரணம் போராட்டகாரர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கைகளாக அமைந்தவை முறைமை மாற்றம் (system change) ஆகும்.

அதில் மரபு ரீதியான அரசியல் கலாசாரத்தை மாற்றுவது, ஊழலற்ற மற்றும் பொறுப்புக் கூறும் அரசாங்கத்தினை உருவாக்குவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது, சட்டத்தின் ஆட்சியினை உறுதி செய்வது மற்றும் ஆட்சி முறையில் மக்கள் நேரடியாக பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்குதல் என்பன பிரதான கோரிக்கைகளாக காணப்பட்டன.

அக்கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய இயலுமையுள்ள அரசியல் இயக்கமாக தேசிய மக்கள் சக்தியை இலங்கை மக்கள் நம்பியுள்ளனர் என்பதனை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மீது ஏனைய மரபு ரீதியான அரசியல் கட்சிகள் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை.

மேலும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் தொடர்ந்தும் ஊழலுக்கு எதிராக, முறைமை மாற்றத்திற்காக, மேட்டுக்குடி ஆட்சிக்கு எதிராக, நல்லாட்சிக்காக குரல் கொடுத்து வந்துள்ளது. இவை அனைத்தும் தேசிய மக்கள் சக்தியின் வரலாறு காணாத வெற்றியில் பங்களிப்பு செய்திருக்கலாம்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் ஒரு தனிக் கட்சிப் பெற்ற மாபெரும் வெற்றியாக இதனை கருத முடியும். 

அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுகின்றபோது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு நடத்தையில் சில அடிப்படை வேறுபாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அத்தகைய வேறுபாடுகளையும் இத்தேர்தலின் முடிவுகளில் அவதானிக்க கூடிய சில முக்கிய மாற்றங்களையும் இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி ஆறு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 5,634,915 வாக்குகளைப் பெற்றிருத்துடன், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 6,863,186  வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியினை 1,228,571 வாக்குகளால் அதிகரித்துள்ளது.

இது இலங்கையில் தேர்தல் அரசியலில் ஆறு வாரங்களில் இடம்பெற்ற மிகப் பெரிய மாற்றமாகும். இவ்வெற்றியினை சில அரசியல் அவதானிகள் ஜனாதிபதி தேர்தலில் புவிநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாகவும், அது பாராளுமன்றத் தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது என வர்ணிக்கின்றார்கள்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோட்டாபய தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,853,693 வாக்குகளை பெற்று 145 ஆசனங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த வெற்றியானது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினையும், முஸ்லிம் எதிர்ப்புவாதத்தையும் தூண்டிவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

ஆயினும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியில் இன, மத, சாதி, மொழி மற்றும் பிரதேச காரணிகள் பெரியளவில் செல்வாக்கு செலுத்தியதாக தெரியவில்லை. மொட்டு கட்சியை மக்கள் முற்றாக புறக்கணித்தமை, திலித் ஜெயவீர  போன்றவர்களுடைய இனவாத கட்சிகளையும் வேட்பாளர்களையும் மக்கள் முற்றாக நிராகரித்தமையானது இதனை மேலும் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயினும், இத்தேர்தலின் முடிவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு இலங்கையில் சிங்கள - பௌத்த பெரும்பான்மைவாதம் முடிவிற்கு வந்துவிட்டதாக அனுமானிப்பது கடினமாகும். அத்தகையதொரு நிலைமை இலங்கையில் உடனடியாகவே ஏற்பட்டு விடும் என எதிர்பார்த்துவிட முடியாது.

அதற்கு வரலாற்று படிப்பினைகள் பல உண்டு (உதாரணமாக 2015இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினை குறிப்பிடலாம்). அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள், இனம் மற்றும் மதம் தொடர்பான விடயங்களில் அவர்களின் அனுகுமுறைகள் என்பன இலங்கையில் சிங்கள - பௌத்தத்தின் மேலாதிக்கத்தின் செல்நெறியை தீர்மானிக்கும்.

அதேபோல் இத்தேர்தல் முடிவுகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதம் முடிவிற்கு வந்துவிட்டதாக கருதுவது பொருத்தமற்றதாகும். இவற்றின் இயங்குநிலை தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.

மிக முக்கியமாக, சிறுபான்மை மக்கள் (வடக்கு, கிழக்கு, மலையகம்) முதல் தடவையாக மரபு ரீதியான அரசியலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவினை வழங்கியுள்ளனர். இது சிறுபான்மை தேர்தல் அரசியலின் ஒரு புதிய அத்தியாயம் எனலாம்.

ஆகவே தேசிய மக்கள் சக்தி சிறுபான்மை மக்கள் வழங்கிய ஆதரவினை எவ்வாறு கையாளப் போகிறது, எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது போன்ற விடயங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதத்தின் செல்வழியினை தீர்மானிக்கும்.

சஜித் பிரமதாச ஜனாதிபதித் தேர்தலில் 4,363,035 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன், நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில்  வெறும் 1,968,716 வாக்குகளையேப் பெற்றுக்கொண்டார்.

இதன் மூலம் வெளிப்படுவது யாதெனில், சஜித் பிரமதாசவின் கட்சிக்கு 2,394,319 பேர் இம்முறை வாக்களிக்கவில்லை என்பதாகும். அதே போல், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் 2,299,767 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வெறுமனே 500,835 வாக்குகளையே அவரது புதிய ஜனநாயக முன்னணிப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் அக்கட்சி 1,798,932 வாக்குகளை இத்தேர்தலில் இழந்துள்ளது.

இவ்விரு பிரதானக் கட்சிகளுக்கும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிக்காமைக்கு பின்வரும் காரணங்கள் ஏதுவாக அமைந்திருக்கலாம். அந்த வகையில்,

1.    ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ஆதரவாளர்கள் அரசியல் ஆர்வத்தை இழந்திருக்கலாம்.

2.    தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டில் ஏற்பட்ட முற்போக்கான மாற்றங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் இவ்விரு கட்சிகளின் மீதும் ஒரு வகையான அதிருப்தியினை ஏற்படுத்தி இருக்கலாம்.

3.    இவ்விரு கட்சிகளிலும் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் ஊழல் மிகுந்த, மக்கள் நம்பிக்கையினை இழந்த, வர்க்க அரசியலை ஊக்குவிக்கும் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மக்கள் ஆணையை தொடர்ச்சியாக மீறியவர்களாக காணப்பட்டமை வாக்களிக்கும் ஆர்வத்தினை இல்லாது செய்திருக்கலாம்.

4.    இம்முறை ஜனாதிபதி தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்பட்டது. தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது. அதில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களுக்கு வேறுப்பட்ட ஆதரவுத்தளம் காணப்பட்டது. ஆகவே,  ரணில் மற்றும் சஜித் ஆதரவாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கலாம். அது பாராளுமன்றத் தேர்தலில் குறைவடைந்திருக்கலாம்.

5.    பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவது கடந்த கால அனுபவமாக காணப்படுகிறது. இதனை 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆகவே, இக்காரணியும் சஜித் மற்றும் ரணில் ஆகியோரின் வாக்கு விகிதத்தினை குறைவடைய செய்திருக்கலாம்.

மறுபுறமாக, ஜனாதிபதித் தேர்தலிலே மொத்தமாக அளிக்கப்பட்ட  வாக்குகள் 13,619,916 ஆக காணப்பட்டது. ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் அளிக்கப்பட்ட வாக்குகள் 11,815,246 மாத்திரமே ஆகும். இதன்படி 1,804,670 வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது புலனாகிறது.

இது எண்ணிக்கையில் அதிகமானதாகும். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து சுமார் ஒன்றரை மாத காலத்திற்குள் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 18 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் அரசியல் மீது அவர்களுக்கு இருக்கின்ற பாரிய அதிருப்தியினை காட்டுகின்றது. இந்த அதிருப்தி தாம் ஜனாதிபதித் தேர்தலிள் வாக்களித்த வேட்பாளர்கள் தோல்வியடைந்த காரணத்தினாலும் ஏற்பட்டிருக்கலாம்.

அதேபோல், மக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது சஜித் பிரமதாசவிற்கோ வாக்களிப்பதனால் தேர்தல் பெறுபேற்றில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்ற எண்ணத்தில் கூட வாக்களிக்காமல் இருந்திருக்கலாம்.

மேலும் அடுத்தடுத்து இரண்டு பிரதான தேர்தல்கள் இடம்பெற்றமையினால் வாக்களிப்பு ஆர்வம் குறைந்திருக்கலாம். அத்துடன், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் பற்றி மக்களுக்கு போதிய தெளிவு மற்றும் அறிமுகம் இருக்கவில்லை என்பதுடன், பல மாவட்டங்களில் மக்களின் அவநம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் போட்டியிட்டமையினால் ஒரு வகையான விரக்தி ஏற்பட்டு (ஊழல் மோசடி, குடும்ப அரசியல், சலுகை அரசியல், அதிகார துஸ்பிரயோகம், கட்சிகள் மீதான விரக்தி நிலை போன்றவற்றால்) வாக்களிப்பதனை தவிர்த்திருக்கலாம். 

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, 4,193,251 வாக்காளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ வாக்களிக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளை நோக்கும் போது வெளிப்படுகின்றது. அதில் சுமார் 12 இலட்சம் பேர் தேசிய மக்கள் சக்திக்கு இம்முறை வாக்களித்துள்ளனர்.

அத்துடன் சுமார் பதின்னொன்றரை இலட்சம் பேர் ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் (இலங்கை தமிழரசுக்கட்சி,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன குரல், ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேட்சைக் குழுக்கள்). எஞ்சிய சுமார் 18 இலட்சம் பேர் இம்முறை வாக்களிப்பதினை தவிர்த்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வர முடியும்.

அதேபோல் ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 300,300 ஆகவும், பாராளுமன்றத் தேர்தலில், அது 50 சதவீதத்தால் அதிகரித்து 667,240ஆகக் காணப்படுகிறது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 விகிதமாகும்.

பிரதானக் கட்சிகளான மொட்டுக்கட்சி (3.14), ரணிலின் புதிய ஜனநாயக முன்னணி (4.49) மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (2.31) போன்றன பெற்ற மொத்த வாக்குகள் நிராகரிக்கப்பட்ட 5 விகிதத்திற்கும் குறைவாகும் என்பதனை இங்கு பதிவு செய்வது பொருத்தமாகும்.

இது எதிர்கால தேர்தல்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். காரணம் சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை சராசரியாக 30,000 தொடக்கம் 40,000 ஆக காணப்பட்டது. ஆகவே அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அப்பால் சென்று, வாக்காளர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்ற அறிவூட்டலை வழங்க வேண்டும்.

மொத்தத்தில் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் எதிர்பாராத பல மாற்றங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதில் ஒரு சில விடயங்கள் மாத்திரமே இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக பெண்களின் அதிகரித்த அரசியல் பிரவேசம், எதிர்க்கட்சியின் நிலை மற்றும் வகிபங்கு போன்ற இன்னும் பல விடயங்கள் இக்கட்டுரையில் ஆராயப்படவில்லை.