படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்

படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்

ஷிரான் இளன்பெருமா

கடந்த ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16ஆவது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை முறையாக சேர்க்கப்பட்டன.

உச்சிமாநாட்டின் போது, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், நைஜீரியா, உகாண்டா, கியூபா மற்றும் பொலிவியா உட்பட மேலும் 13 நாடுகள் பங்குதாரர் உறுப்பினர்களாக ஆகின.

இந்த ஆண்டு, பிரிக்ஸில் அங்கத்துவம் பெற விண்ணப்பித்த உலகளாவிய தெற்கில் இருந்தான வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைகிறது. கசான் உச்சிமாநாட்டிற்கு சென்ற இலங்கை தூதுக்குழுவினருக்கு வெளியுறவு செயலாளரான அருணி விஜேவர்தன தலைமை தாங்கினார்.

அதேநேரத்தில், வெளிவிவகார அமைச்சரான விஜித ஹேரத் பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கு ஆதரவளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். காசாவில் இஸ்ரேலிய இனப்படுகொலை நிகழ்வு, உக்ரேனில் நேட்டோ தலைமையிலான பினாமி யுத்தம் மற்றும் சீனா மீதான அமெரிக்கா தலைமையிலான புதிய பனிப்போர் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்ற, அதிகரித்து வரும் பதட்டமான உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் கசான் உச்சிமாநாடு நிகழ்கின்றது.

உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உரை, ஓர் உலகானது ‘சீர்குலைவு மற்றும் குழப்பத்தின் படுகுழியில்’ இறங்குவதை விவரிக்கிறது. ரஷ்ய நாவலான என்ன செய்ய வேண்டும்? இனை குறிப்பிட்டு (அத்துடன் விளாடிமிர் லெனின் ஒரு முக்கிய உரையின் தலைப்பு), ஜி பிரிக்ஸின் உணர்வை சுருக்கமாகக் கூறினார்:

“நம் காலம் எவ்வளவு கொந்தளிப்பாக மாறுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் முன்னரங்கில் உறுதியாக நிற்க வேண்டியதுடன், விடாமுயற்சியை வெளிப்படுத்த வேண்டும், முன்னோடியாக இருப்பதற்கான துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும், மாற்றியமைப்பதற்கான புத்திக்கூர்மையை வெளிப்படுத்த வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஓர் முதன்மையான வழிமுறையாக பிரிக்ஸினை உருவாக்குவதற்கும், உலகளாவிய ஆளுகை சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்கான முன்னணிப் படையாகவும் உருவாக்குவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.”

செய்தி தெளிவாக உள்ளது. பிரிக்ஸ் என்பது அமெரிக்கா தலைமையிலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கை வகைப்படுத்திய அரசியல் ஆதிக்கம் மற்றும் ஒருதலைப்பட்சவாதத்திற்கு எதிரான அமைதியான அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கின்றது.

உலகம் குழப்பத்தில்

முரண்பாடாக, பிரிக்ஸ் என்ற சுருக்கமானது 2001 ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாக்ஸ் ஆவணத்தின் அறிக்கையிலிருந்து உருவானதுடன், அது பொருளாதார சக்தியின் மாற்றத்தையும் அதற்கு G7 உலகளாவிய தெற்கில் இருந்து அதிகமான உறுப்பினர்களை உள்ளடக்க வேண்டும் என்றும் முன்னறிவித்தது.

எவ்வாறாயினும், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகள் மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்று சுழற்சியின் விளைவாக பிரிக்ஸ் அமைப்பிற்கு ஓர் சம்பவம் உள்ளது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் விழிப்புணர்விலிருந்து அரபு கிளர்ச்சி, இந்திய சுதந்திர இயக்கம், ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட அலைகள் மற்றும் அணிசேரா இயக்கம் வரை தற்போதைய பல்முனை யுக்தி வரை ஒரு கோடு வரையப்படலாம். பிரிக்ஸ் என்பது இந்த நீண்ட வரலாற்றின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமேயாகும்.

ஆயினும்கூட, இந்த அமைப்பு முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்தியா QUAD இன் உறுப்பினராகவும், அமெரிக்கா தலைமையிலான இந்திய-பசிபிக் வியூகத்தின் முக்கிய முடிச்சாகவும் உள்ளது. நிறவெறிக்குப் பிந்தைய தென்னாப்பிரிக்கா நவதாராளவாதத்தால் முற்றிலும் செயற்பாடற்றதாகும். குழுவில் இணைவதற்கான வெனிசுலாவின் விண்ணப்பத்தை பிரேசில் தடுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமெரிக்க நிதியியல் மற்றும் இராணுவக் கட்டமைப்பில் ஆழமாகப் பொதிந்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவிய முதல் அரபு நாடாகும். சீனாவும் ரஷ்யாவும் குழுவின் போர்க்குணமிக்க மையமாக உள்ளதுடன் உலகளாவிய ஒழுங்கை மீள்வடிவமைக்க அதிகமான வளங்கள் மற்றும் சக்தி கொண்ட நாடுகளாக உள்ளன.

ஆயினும் பலதரப்பட்ட மற்றும் சில சமயங்களில் முரண்பாடான அரசியல் செயற்திட்டங்களைக் கொண்ட நாடுகளை ஒத்துழைப்பிற்கான பொதுவான தளத்தில் ஒன்றிணைக்க கட்டாயப்படுத்தும் புறநிலை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் காரணிகள் உள்ளன.

அமெரிக்கா பாதுகாப்புவாதம், மேம்பட்ட போர்களை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துதல், உலகளாவிய நிதியியல் அமைப்பின் மீதான அதன் கட்டுப்பாட்டை ஆயுதமாக்குதல் மற்றும் உலகின் இருப்பு நாணயத்தை அச்சிடுவதில் அதனது ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக அதிகரித்த முறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், பெரும்பான்மையான உலக நாடுகள் இன்னும் போர், வறுமை மற்றும் அபிவிருத்தி குறைவு ஆகியவற்றுடன் போராடுகின்றது. இந்த உலகளாவிய பெரும்பான்மையினரின் சமானத்திற்கான கோரிக்கை, உற்பத்தித்திறனை மேம்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டிற்கான நிதியுதவி ஆகியவைதான் பிரிக்ஸ் அமைப்பிற்கான அடிப்படையாகும்.

BRICS மற்றும் இலங்கையின் கைத்தொழில்மயமாக்கலின் எதிர்காலம்

சர்வதேச ஒழுங்கின் சீர்குலைவு மற்றும் குழப்பத்திற்கு இலங்கை ஒரு உதாரணமாக இருக்கலாம். பல வழிகளில், நாட்டின் உள்ளக உறுதியற்ற தன்மைகள் வெளிப்புற காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

முதலாவதாக, உக்ரைனில் நடந்த போரைத் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை பணவீக்கம் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியன ஏற்கனவே கொவிட்-19 மற்றும் சுற்றுலா மற்றும் பணம் அனுப்புகையின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு நாட்டைத் தாக்கியது.

மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் பிராந்திய மோதலைத் தூண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், நீண்டுள்ள பொருட்களின் விலைப் பணவீக்கமானது இலங்கைப் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மறுசீரமைப்பு செயன்முறையானது உலகளாவிய நிதியியல் கட்டமைப்பு மற்றும் பிரெட்டன் வூட்ஸ் நிறுவனங்களின் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

உபரிகளை மீள்சுழற்சி செய்வதற்கும், உற்பத்தி உட்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறைக்கு சலுகை நிதி வழங்குவதற்குமான உலகளாவிய அமைப்பு இல்லாமை இலங்கை போன்ற நாடுகளால் வலுவாக உணரப்படுகிறது.

IMF மற்றும் உலக வங்கியால் விதிக்கப்பட்ட பணவழங்கல் குறைப்புக் கொள்கைகள் கைத்தொழில்மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானவையாகும். நாடு பற்றிய அதன் முதல் அறிக்கையிலிருந்து, உலக வங்கியானது உள்ளூர் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை பெரிய அளவிலான கைத்தொழிற்துறையிலிருந்து விலக்கி, விவசாயிகள் காலனித்துவம், சேவைகள் மற்றும் நுண்தொழில் முயற்சியாண்மை உள்ளிட்ட பல்வேறு ஒரு வழிப்பாதைகளை நோக்கித் திருப்ப முயன்றது.

இந்த வழியில் எந்தவொரு நாடும் அபிவிருத்தியடைய முடிந்தது போலாகும். இதற்கு நேர்மாறாக, விருத்தியடைந்து வரும் புதிய அபிவிருத்தி வங்கி டொலரைத் தவிர மற்ற நாணயங்களில் அபிவிருத்திக்கான நிதியுதவிக்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது.

பெரிய அளவிலான தொழிற்துறையின் அடித்தளத்தில் மட்டுமே இறையாண்மை கட்டமைக்கப்பட முடியும் என்பதை ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் நன்கு அறிவர். பிரிக்ஸ் மூலமாக, புதிய நிதியளிப்பு பொறிமுறைகள் மற்றும் உலகளாவிய தெற்கில் இருந்து வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இலங்கையில் கைத்தொழில்மயமாக்கலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கைத்தொழிற்துறை புரட்சிக்கான பிரிக்ஸ் பங்காண்மை (PartNIR) உட்பட இலங்கை நன்மை பெறக்கூடிய பல தொழிற்துறை முன்முயற்சிகளை பிரிக்ஸ் கொண்டுள்ளது. PartNIR ஆலோசனைக் குழுவானது இரசாயனங்கள், சுரங்கம் மற்றும் உலோகங்கள், மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் பணிக்குழுக்களை உருவாக்கியுள்ளது என்று கசான் பிரகடனம் தெரிவிக்கிறது.

இவை அனைத்தும் 21ஆம் நூற்றாண்டில் கைத்தொழில்மயமாக்கலை நோக்கிய உந்துதலில் இலங்கை கருத வேண்டிய பெறுமதி சேர்க்கப்பட்ட தொழிற்துறைகளாகும். இறுதியாக, கசானில் ஜனாதிபதி ஜியின் உரையானது, பசுமை தொழிற்துறை சங்கிலிகளில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சீனாவின் விருப்பத்தை எடுத்துக்காட்டுகிறது.

சீனா தற்போது பசுமை ஆற்றல் துறையில் ஆதிக்கம் செலுத்துவதுடன், இதில் அரிய பூமி கனிமங்கள் மற்றும் மின்கலங்கள் மற்றும் சூரியப்படல்களின் உற்பத்தி ஆகியவை உள்ளடங்கும். பிரிக்ஸின் ஓர் உறுப்பினராக, இலங்கையானது கிரப்பீன் போன்ற உள்நாட்டு வளங்களின் பெறுமதி சேர்ப்பை மேம்படுத்துவதற்கும் பசுமை எரிசக்தி தொழிற்துறை சங்கிலியில் இணைவதற்கும் இந்தத் துறையில் சீன நிபுணத்துவத்தைப் பயன்படுத்த முடியும்.

BRICS முன்னேற்றம் தொடர்பில் இன்னும் அதிகமாக பணியாற்றவேண்டியுள்ளது. அதன் விளைவானது கல்லில் எழுதப்படவில்லை. பாண்டுங்கின் உணர்வில், பிரிக்ஸின் விளைவினை வடிவமைப்பதிலும், உலக வரலாற்றில் அதன் சரியான இடத்தைப் பெறுவதிலும் இலங்கை முனைப்பான வகிபங்கினை வகிக்க வேண்டும்.

ஷிரான் இளன்பெரும சமூக ஆய்விற்கான நிறுவனமான Tricontinental இல் ஒரு ஆராய்ச்சியாளராவார். அவர் லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் பொருளாதாரக் கொள்கையில் விஞ்ஞான முதுமாணி பட்டம் பெற்றவராவார்.