NUA, பிரஜைகள் முன்னணி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
றிப்தி அலி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையின் படி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் இது தொடர்பிலான 2263/22 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21ஆம் திகதி வெளியிட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய - பிரஜைகள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய, எக்சத் லங்கா மகா சபா கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை போன்றன காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 73 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு தேர்தலில் போட்டியிட அங்கீகரித்துள்ளது. புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவியில் நிலவும் சர்ச்சை மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த தற்காலிக தடையினை நீக்க முடியும்" என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)