ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வட்டிலப்ப பொதிகளுடன் சென்ற றிஸ்வி முப்தி
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று (11) வியாழக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து வந்ததை அவதானிக்க முடிந்தது.
சுமார் 20 பொதிகள் இவ்வாறு எடுத்து வரப்பட்டதுடன் அதில் 12 பொதிகள் ஆணைக் குழுவின் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் ஏனையவை, ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.
அந்த பொதிகளில் பலவற்றை ஆணைக் குழுவின் சேவையாளர்கள் சிலரும் இணைந்து ஆணைக் குழுவுக்குள் எடுத்துச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறாயினும் அந்த பொதிகளில் 'வட்டிலப்பம்' இருந்ததாக பின்னர் அறிய முடிந்தது. நீதிமன்றத்துக்கு சமமான கெளரவத்துடன் இடம்பெறும் சாட்சி விசாரணை இடம்பெறும் இடத்துக்குள் சாட்சியாளர் ஒருவர் இவ்வாறு வட்டிலப்பம் எடுத்துச் சென்றமை பெரும் சலசலப்பை எற்படுத்தியுள்ளது.
வழமையாக ஆணைக்குழுவுக்குள் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக் காலமாக கொவிட் நிலைமை காரணமாக அந் நிலைமையில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் குறித்த வட்டிலப்பம் பொதிகளை எடுத்து செல்லும் போது ஆணைக்குழுவின் சேவையாளர்களும் தொடர்புபட்டிருந்ததால் எந்த பரிசோதனைகளும் இன்றி அவை உள்ளே எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
"குறித்த பொதிகளை சோதனை செய்ததாகவும், அதில் வட்டிலப்பம் இருந்தமை உறுதியான நிலையில், ஏனைய நாட்களிலும் ஆணைக்குழுவின் சேவையில் உள்ளவர்கள் உணவுகளை உள்ளே எடுத்துச் செல்வதால் அதனை தடுக்கவில்லை" என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பின்னர், அந்த பொதிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆணைக்குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவித்த போதும், அவை திருப்பி எடுத்துச் செல்லப்பட்டதை நாம் காணவில்லை.
Comments (0)
Facebook Comments (0)