உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன்: ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உரிய அனைத்தையும் செய்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்ற (21) செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஒரு பூர்த்தி இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"தீவிரவாத வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போம் என்பதுவே இன்றைய நாளில் நாம் பூணும் திடசங்கற்பம் ஆகும்! கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர், 2019, ஏப்ரல் 21, ஞாயிறு, அன்று - முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும் முன்னணி தங்கு விடுதிகள் சிலவற்றையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும், கடுமையாக காயப்பட்டவர்களினதும், நிரந்தர உடற் பாதிப்புக்கு உள்ளானவர்களினதும் - குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெருந் துயருக்கு உள்ளான கத்தோலிக்க மக்களுக்கும், ஏனைய அனைத்து இலங்கையர்களுக்கும், எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களினால் 270 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் நிரந்தர உடற் பாதிப்பிற்கும் உள்ளாகினர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும்.
எந்தச் சிந்தனையின் பெயரில் இந்த மனிதப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும், இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும். தேசிய பாதுகாப்பை மறந்து, பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த ஞாயிறு மனிதப் படுகொலைக்கு உகந்ததான பின்னணி உருவானது.
அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல. 'சுபீட்சத்தின் நோக்கு' என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் நான் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்த வகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும் இடமளிக்காது இருப்பதற்கும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் உரிய அனைத்தையும் செய்வேன் என நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது ஆத்மார்த்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Comments (0)
Facebook Comments (0)