மும்பையில் நடைபெற்ற அங்குரார்ப்பண WAVES மாநாட்டில் இலங்கை பேராளர்கள் பங்கேற்பு
இசை, திரைப்பட இயக்கம், நடிப்பு, தயாரிப்பு & திரைப்பட விநியோகம், அனிமேஷன் மற்றும் விளையாட்டுகள் (Gaming) உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் சேர்ந்த 19 நிபுணர்கள் உள்ளடங்கிய இலங்கை பேராளர்கள் மே 01 முதல் 04 வரையில் இந்தியாவின் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டின் (WAVES) 2025 ஆரம்ப பதிப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய பிரதமரின் சிந்தனையின் கீழ் முன்னெடுக்கப்படும் WAVES - 2025 மாநாடு உலகளாவிய ரீதியில் துறைசார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்து எல்லை கடந்த பேச்சுகள், படைப்பாற்றல் மற்றும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்பு ஆகியவற்றினை வலுவாக்குகின்றது.
இந்த மாநாடு 2025 மே முதலாம் திகதி பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. துரிதமாக வளர்ந்து வரும் உலக ஊடக சூழலில் கலாசாரங்கள் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புணர்வுடனான கதை கூறலுக்கு அழைப்பு விடுக்கும் WAVES பிரகடனத்துடன் உலகளாவிய ஊடக மாநாடான WAVES - 2025 பூரணமடைந்தது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நாடுகள் பிளவுகளை நீக்கி தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சமாதானத்தை மேம்படுத்துவதிலும் தனி கதைகள் மற்றும் திரைப்படங்களின் சக்தியினை உணர்ந்து கொண்டிருந்தன.
அத்துடன் தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துதல், இளைஞர் திறனை மேம்படுத்துதல் மற்றும் உலகளாவிய ரீதியில் இணை-தயாரிப்புகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அவசியத்தினை இந்த மாநாடு வலியுறுத்தியிருந்த அதேவேளை இவ்வாறான திட்டங்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சி திட்டங்கள் குறிப்பாக உலகளாவிய ரீதியில் பன் மொழி படைப்புகள் சார் திறனை ஊக்குவிக்க இந்தியாவில் தயாரித்தல் சவால் போன்ற திட்டங்களை இந்தியா குறிப்பிட முடிந்தது.
சினிமா, டிஜிட்டல், பொழுதுபோக்கு, அனிமேஷன் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட இத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் பரந்து காணப்படும் விடயங்களை உள்ளடக்கியதாக நடைபெற்ற அமர்வுகள், கண்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்களில் இலங்கை பேராளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் உலக ஊடக தோற்றப்பாடு குறித்த சரியான செல்நெறி மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து பெறுமதியான உள்ளீடுகளை இப்பேராளர்கள் பெற்றுக் கொண்டிருந்த அதேசமயம் இந்த அனுபவம் அவர்கள் அனைவரையும் மேலும் வலுவூட்டுவதாக அமைந்திருந்தது.
திறன்களை பரிமாறுவதற்கும், ஒன்றிணைந்த தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய ரீதியில் ஸ்திரமான தொழில்துறை வளர்ச்சிக்கும் தனித்துவமான தளத்தினை வழங்கும் அதேவேளை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் பிராந்திய ரீதியான உறவினை வலுவாக்குவதிலும் WAVES 2025 மாநாடு முக்கியமான ஒரு நகர்வாக அமைகின்றது.
Comments (0)
Facebook Comments (0)