உண்மைத் தகவல்களின் அடிப்படையில் வௌியிடப்படும் கருத்துக்களை கூறுவது விளக்கமறியலில் வைப்பதற்கான விடயமல்ல: நீதவான்
அரசியலமைப்பின் 14 (1) சரத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு கருத்து சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதால் உண்மைத் தகவல்களின் அடிப்படையில் வௌியிடப்படும் கருத்துக்களை கூறுவது விளக்கமறியலில் வைப்பதற்கான விடயமல்ல என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் உப தலைவர் ஆனந்த பாலித்த கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்,
இதன்போதே மேற்படி விடயத்தினை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு சுட்டிக்காட்டிய கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம, தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் உப தலைவர் ஆனந்த பாலித்தவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஆனந்த பாலித்த, இதன்போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல உத்தரவிடப்பட்டார்.
இதேவேளை, சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாமெனவும் அவ்வாறு வழங்கப்பட்டால் அவர் மீண்டும் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் கருத்துக்களை வௌியிட சந்தர்ப்பம் உள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் மன்றுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதாகவும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளதாகவும் உண்மையான விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, தமது சேவை பெறுநர் அவ்வாறு கூறியமை தவறில்லை என ஆனந்த பாலித்த சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஶ்ரீநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென கொழும்பு மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வௌியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் உப தலைவர் ஆனந்த பாலித்த நேற்றைய தினம் (21) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
Comments (0)
Facebook Comments (0)