முன்மாதிரியான 5 அரச ஊழியர்கள் 'நேர்மைக்கு மகுடம் விருது' வழங்கி கௌரவிப்பு
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது 2022/23ம் ஆண்டுக்கான இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கும் இறுதி விழாவினை இன்று (17) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடாத்தியது.
நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சிறந்த விழுமியங்களை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு சேவையாற்றும் அரச ஊழியர்களை அங்கீகரித்து கெளரவிக்கும் ஓர் தளமாக இந்நிகழ்வு திகழ்கிறது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை முதன்மையாக கொண்டு நேர்மையாகவும் தமது கடமைகளுக்கு மேலதிகமாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றும் நேர்மையான அரச ஊழியர்களை கண்டறியும் இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) செயற்திட்டத்தினை எக்கவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாவது முறையாக TISL நிறுவனம் ஏற்பாடு செய்தது.
இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) எனும் நேர்மையான அரச ஊழியர்களுக்கு விருது வழங்கும் முயற்சியானது நேபாளத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இலங்கை உட்பட 12 நாடுகள் இவ்விருது வழங்கும் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வின் போது சிறந்த ஐந்து அரச ஊழியர்களுக்கு இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 விருதினை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அவர்கள்:
1. சுபாஜினி மதியழகன் - பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - வலிகாமம் கிழக்கு, கோப்பாய்
2. விஜயவர்தன அபேயவிக்ரம நிசங்க - வைத்தியர், மாவட்ட ஆதார வைத்தியசாலை - ரிகில்லகஸ்கட மற்றும் சுகாதார சேவைகள் அலுவலக மாவட்ட பணிப்பாளர் - நுவரெலியா
3. யசோதா உதயகுமார் - பிரதேச செயலாளர், பிரதேச செயலகம் - வலிகாமம் தென் மேற்கு, சண்டிலிப்பாய்
4. பிரதிபானி ஸ்ரீ விஜயந்தி மொல்லிகொட - தாதி, ஆதார வைத்தியசாலை - எல்பிட்டிய
5. நளின் பிரசன்ன விஜேசேகர - மேலதிக சுகாதார வைத்தியர், பொதுச் சுகாதார பணிமனை - அம்பலாங்கொடை
இவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் வாழ்க்கை கதையினை தனது சக ஊழியர்களுடன் பகிந்து அவர்களையும் ஊக்கப்படுத்தினர்.
அதேபோன்று இறுதிச் சுற்றுக்கு தெரிவான பன்னிரண்டு அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஐந்து பேர் அடங்கிய அனுபவம் வாய்ந்த நடுவர் குழுவினால் விண்ணப்ப மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் என சுமார் ஏழு மாத கால மிக நுணுக்கமான மதிப்பீட்டை தொடர்ந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி . ஒஸ்டின் பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி S. தில்லைநடராஜா, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், சர்வோதய சிரமதான சங்கத்தின் பொதுச் செயலாளருமான வைத்தியர் வின்யா ஆரியரத்ன, சமாதானம் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் சிரீன் சரூர் மற்றும் ஆசியா பௌண்டேஷனின் நீதி மற்றும் பால்நிலை செயற்திட்ட பணிப்பாளர் ரமணி ஜயசுந்தர ஆகியோர் நடுவர் குழு உறுப்பினர்களாவர்.
விண்ணப்பதாரிகளின் அல்லது பரிந்துரைக்கப்பட்டோரின் அர்ப்பணிப்பு, சாதனைகள், தியாகங்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் என்பன சமூக மட்டத்தில் ஏற்படுத்திய சாதக விளைவுகளின் அடிப்படையில் இம்மதிப்பீடுகள் இடம்பெற்றன.
குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் அரச துறையில் பணியாற்றிய மற்றும் ஓய்வுபெற இன்னும் ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட காலத்தை கொண்டிருக்கும் அரச ஊழியர்கள் இவ்விருதுக்கு பங்கேற்க தகுதியுடையவர்களாவர்.
வேறுபட்ட பதவி மட்டங்கள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த அரச ஊழியர்களை உள்ளடக்கும் நோக்குடனேயே இவ்விருதுக்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளையும் சுய விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்கிறது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிதி ஆணைக்குழுவின் தலைவராக தற்போது கடமையாற்றும் சிரேஷ்ட அரச அதிகாரியான சுமித் அபேசிங்க கலந்துகொண்டார்.
தனது உரையில் "நேர்மை என்பது வினைத்திறனான அரச நிர்வாகத்தின் முக்கிய விடயங்களில் ஒன்றாகும் மேலும் இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) போன்ற செயற்திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்தை கட்டியமைக்க முக்கிய பங்காற்றுகின்றது.
இங்கு அவ்வாறான முன்மாதிரியான அரச ஊழியர்களை காண்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் சேவைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஓர் உத்வேகமாகும்" என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா தனது உரையில்
"நமது சமூக மாற்றத்தில் நெறிமுறையான அல்லது நேர்மையான தலைமைத்துவத்தின் பங்கிற்கு ஓர் சான்றாக இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) செயற்திட்டம் திகழ்கிறது.
இந்த அர்ப்பணிப்புள்ள அரச ஊழியர்கள் தமது சேவையினை நேர்மையுடன் வழங்குவதனை நிரூபித்துள்ளனர். அவர்களின் சாதனைகளை நாம் அங்கீகரித்து கொண்டாடும் அதேவேளை அவர்களின் சாதனைகள் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்படுத்திய சாதக விளைவுகள் ஊழலற்ற பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்" என குறிப்பிட்டார்.
இன்டக்ரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 செயற்திட்டமானது ஓர் மாற்றத்தினை உருவாக்கும் TISL நிறுவனத்தின் முயற்சியாகும். இந்த செயற்திட்டத்தினூடாக நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அரச ஊழியர்களை ஊக்கப்படுத்தவும் ஊழலுக்கு எதிரான கூட்டணியினை உருவாக்கவும் அரச ஊழியர்களின் கடமைகளில் அசைக்க முடியாத நேர்மையினை நிலைநிறுத்தவும் முயல்கிறது.
அரச சேவையில் நாம் விரும்பும் பரிமாண மாற்றத்திற்கு நாடு தழுவிய உரையாடல்களை வலுப்படுத்துவதனூடாக வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனான அரச நிர்வாக முறைமைக்கு பங்களிப்பதை இந்த செயற்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ்விருது வென்றவர்களை முன்மாதிரிகளாக அங்கீகரித்து அவர்களை சமூக மட்டத்தில் அடையாளப்படுத்துவதன் நோக்கம் நாட்டில் மனசாட்சியுடன் கூடிய எதிர்கால தலைமையை இதனூடாக ஊக்கப்படுத்துவதற்காகும்.
Comments (0)
Facebook Comments (0)