1,200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சியை ரத்துச் செய்யுமாறு உத்தரவு

1,200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சியை ரத்துச் செய்யுமாறு உத்தரவு

- அஹமட் -

கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி - தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு - கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பொருட்டு, கல்முனை கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்று திரட்டி, மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்ச்சி தொடர்பில் கிளம்பியுள்ள எதிர்ப்பு மற்றும் அந்த நிகழ்ச்சியை நடத்துவதிலுள்ள ஆபத்துக்கள் குறித்து 'புதிது' செய்தித்தளம் செய்தியொன்றை இன்று (31) வெளியிட்டதோடு, இது தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரிடமும் பேசியது.

இதன்போது பதிலளித்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார்; பாடசாலை நேரத்தில் இவ்வாறான நிகழ்வொன்றை நடத்த முடியாது எனக் கூறியதோடு, இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதமளித்தார்.

இதன் பின்னர் 'புதிது' செய்தியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்; நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்ச்சியை நிறுத்துமாறு, கல்முன வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்தாகக் கூறினார்.

இதேவேளை, விடுமுறை முடிந்து மூன்றாந் தவணை ஆரம்பாகும் நாளைய தினம்,  பாடசாலைகளில் அனைத்துப் பாடங்களும் நடைபெறாது என, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் 'புதிது' செய்தித்தளத்திடம் கூறியிருந்தமையை சுட்டிக்காட்டி - கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம், "அந்தக் கூற்று உண்மைதானா" என்று கேட்டபோது, "வலயக் கல்விப் பணிப்பாளர் அவ்வாறு கூற முடியாது" என்றார்.

நாளை நடைபெற ஏற்பாடாகியுள்ள மேற்படி நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் - பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார் என, அந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - புதிது