ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்கள் பக்கச்சார்பு: ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு மையம்
கடந்த நவம்பர் 16ஆம் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பாரியளவில் வன்முறையற்றதாகவும் தொழிநுட்ப ரீதியில் நன்கு திட்டமிடப்பட்டு காணப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையம் நேற்று அறிவித்தது.
எனினும் இந்தத் தேர்தலில் உள்நாட்டு ஊடகங்கள் பக்ச்சார்பாக நடந்துகொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையம் தெரிவித்தது.
ஜனாதிபதி தேர்தல் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையம் முதற் கட்ட அறிக்கை நேற்று (18) புதன்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது.
இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கண்காணிப்பு மையத்தின் பிரதான கண்காணிப்பாளரான மெரிஷா மெடியஸ் மேற்கண்;டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு மையம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் 80 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் எமது மையத்தின் சார்பாக செயற்பட்டனர். இதற்கு மேலதிக சுமார் 60 உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் எம்முடன் இணைந்து செயற்பட்டனர். அத்துடன் ஐரேப்பிய ஒன்றியத்தின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இவர்கள் நாடளாவிய ரீதியில் காணப்பட்ட 295 வாக்குச் சாவடிகளிலும்; 25 வாக்கெண்ணும் நிலையங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு மேலதிகமாக சமூக ஊடகங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
இந்த தேர்தலில் நாட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக காணப்பட்டனர் என்பது அவர்களின் வாக்களிப்பு வீதத்தில் அறிய முடிந்தது. ஜனநாயகத்தினை தெரிவுசெய்வதற்கான அவர்களது உரிமையினை வாக்களிப்பின் ஊடாக வெளிப்படுத்தியிருந்தனர்.
இது வரவேற்கத்தக்க விடயமாகும். எமது கண்காணிப்பு நடவடிக்கை தேர்தல் செயற்பாடு தொடர்பில் மக்களின் மனதில் நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாரியளவில் அமைதியான முறையில் இடம்பெற்றது. எனினும் பாரம்பரிய மற்றும் சமூக ஊடகங்கள் இந்த தேர்தலில் பாரிய பங்களிப்பு செலுத்தின. குறிப்பாக போலியான தகவல்கள் மற்றும் இனவாத பிரசாரங்கள் ஆகியவற்றினை இந்த பாரம்பரிய மற்றும் சமூக ஊடகங்கள் முன்னெடுத்திருந்தன.
பாரம்பரிய ஊடகங்களில் அரச ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மாத்திரமே தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் ஊடகங்கள் தங்களுக்கு ஏற்றாப் போல் செயற்பட்டன. இது தொடர்பில் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் பேஸ்புக் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் முன்னிலை வகித்தது. எனினும் இதனை கட்படுத்து முடியாமல் இருந்தது. இந்த பிரச்சினை இலங்கைக்கானது மாத்திரமல்ல. இது உலகளாவிய ரீதியில் காணப்படும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.
அது மாத்திரமல்லாமல் அரச வளங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருந்துடன் முன்னணி வேட்பாளர்கள் இருவரினதும் தேர்தல் பிரசார நிதிகள் ஒழுங்படுத்தப்படாமல் காணப்பட்டன. எனினும் பிரசாரத்திற்கான நிதி தொடர்பிலான வெளிப்படைத் தன்மையினை பேணும் வகையில் எதிர்காலத்தில் ஒழுங்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த தேர்தல் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தையும் அமைதியான முறையில் இடம்பெற்றதையும் நாங்கள் அவதானித்தோம். இன, மத மற்றும் சமூக வேறுபாடுகளை மறந்து ஜனநாயகத்தினை உறுதிப்படுத்த மக்கள் செயற்பட்டனர். அரசியல்வாதிகள் இதனை புரிந்து நாட்டின் ஒற்றுமைக்காக செயற்பட வேண்டும்.
எமது கண்காணிப்பு நடவடிக்கைகள் டிசம்பர் நடுப்பகுதி வரை தொடரும். இக்காலப் பகுதியில் தேர்தலுக்கு பின்னரான முறைப்பாடுகள் மற்றும் மேன் முறையீடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும்.
இன்னும் இரண்டு மாதங்களின் பின்னர் எமது இறுதி அறிக்கை வெளியிடப்படும். இதில் இலங்கையின் தேர்தல் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் அடிப்படையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.
-றிப்தி அலி-
Comments (0)
Facebook Comments (0)