கோட்டாபய மாலைதீவிற்கு தப்பியோடுவதற்கு பயன்படுத்தப்பட்டது விமானப் படையின் நிதி

கோட்டாபய மாலைதீவிற்கு தப்பியோடுவதற்கு பயன்படுத்தப்பட்டது விமானப் படையின் நிதி

நீண்ட கால போராட்டத்தின் பின் தகவலறியும் கோரிக்கை மூலம் வெளியாகியது

றிப்தி அலி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு மாலைதீவிற்கு இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் தப்பியோடியதற்கு இலங்கை விமானப் படையின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.

"பாதுகாப்பு அமைச்சின் ஊடாக திறைசேரியினால் இலங்கை விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பராமரிக்கப்படும் விமானமொன்றே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாலைதீவு விஜயத்திற்காக பயன்படுத்தப்பட்டது" என இலங்கை விமானப் படை தெரிவித்தது.

இந்த விஜயத்திற்காக இலங்கை விமானப் படைக்கு எவ்வளவு ரூபா  செலவாகியது என்பது தொடர்பில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட போதிலும் அதற்கான பதிலினை விமானப் படை வழங்கவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இந்த விஜயத்திற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் விமானப் படை, "குறித்த பயணம் இரகசியமானது என்பதனால் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணத்தினை வெளியிட முடியாது" என்றது.

"இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 30 (1) ஆவது உறுப்புரையின் பிரகாரம், அரச தலைவராகவும், நிறைவேற்றதிகாரம் மற்றும் அரசாங்கத்தின் தலைவராகவும், ஆயுதப் படைகளின் தளபதியாகவும் ஜனாதிபதி செயற்படுகின்றார். இந்த விஜயம் இடம்பெற்ற சமயம் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக செயற்பட்டமையினால், அவருடைய குறித்த விஜயத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும்" எனவும் விமானப் படை குறிப்பிட்டது.

எவ்வாறாயினும், அரச தலைவர் அதிவிசேட பிரமுகர் பிரிவில் உள்ளடக்கப்படுவதனால் ஜனாதிபதி மேற்கொள்ளும் விமானப் பயணங்களுக்கு செலவாகும் எரிபொருளின் அளவினை விமானப் படை கணக்கிடுவதில்லை. இதன் பிரகாரம், கோட்டாபய ராஜபக்ஷவின் மாலைதீவு விஜயத்திற்கு செலவாகிய எரிபொருட்களின் அளவும் கணக்கெடுக்கப்படவில்லை என விமானப் படையின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியான ஏயார் வைஸ் மார்ஷல் கே.எம்.கே. கெப்படிப்பொல தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்;டத்தினை அடுத்து கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.

இதனால் இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு 2022.07.13ஆம் திகதி தப்பிச் சென்றார். கோட்டாபய ராஜபக்ஷவுடன் அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப் பாதுகாவளர்களும் சென்றதாக இலங்கை விமானப் படை அப்போது வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த விஜயம் தொடர்பில் இலங்கை விமானப் படையின் தகவல் அதிகாரி மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டு காலப் பகுதியில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (ஆ) (i) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய கோரப்பட்ட தகவல்களை வெளியிட முடியாது எனவும் விமானப் படை தெரிவித்தது. இதற்கு எதிராக தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் நீண்ட விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, மேன்முறையீட்டினை கவனமாக பரிசீலித்த ஆணைக்குழு, மேற்படி தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டத்தின் 5 (1) (ஆ) (i) பொருந்தாது என்று தெரிவித்ததுடன் இந்த தகவல் கோரிக்கைக்கான தகவல்களை 2023.07.04ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மேன்முறையீட்டாளருக்கு  இலங்கை விமானப் படை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

எனினும், குறித்த தகவலை இலங்கை விமானப் படை வழங்காமல், தகவலை வெளியிடுவதற்கான கால அவகாசத்தினை நீடிக்குமாறு ஆணைக்குழுவிடம் 26 தடவைகள் கோரியிருந்தது. எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை அமுல்படுத்த கால அவகசாம் கோருவது தொடர்பில் இச்சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததுடன் இச்சட்டத்தின் 39ஆவது பிரிவின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சத்தியக் கடதாசியும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, கடந்த மே 16ஆம் திகதி இணக்கமின்மை தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரையும் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு அழைத்திருந்ததுடன் இந்த இணக்கமின்மை தொடர்பான தங்கள் பக்க நியாயத்தினை எதிர்வரும் ஒகஸ்ட் 7ஆம் திகதி நடைபெறவுள்ள விசாரணையில் தெரிவிக்குமாறும் விமானப் படைக்கு உத்தரவிட்டது.

இவ்வாறான நிலையிலேயே மிக நீண்ட இழுத்தடிப்பின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் மாலைதீவு விஜயம் தொடர்பான தகவல்களை கடந்த ஜுலை 12ஆம் திகதி இலங்கை விமானப் படை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.