'SLPAஇனால் தகவல் கோரிக்கைக்கு USDஇல் கட்டணம் அறவிடப்படுகின்றமை RTI சட்டத்திற்கு இணங்கிச் செல்லவில்லை'

'SLPAஇனால் தகவல் கோரிக்கைக்கு USDஇல் கட்டணம் அறவிடப்படுகின்றமை RTI சட்டத்திற்கு இணங்கிச் செல்லவில்லை'

றிப்தி அலி

இலங்கை துறைமுக அதிகார சபையினால் தகவல் கோரிக்கைக்கு அமெரிக்க டொலரில் கட்டணம் அறவிடப்படுகின்றமை தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு இணங்கிச் செல்லவில்லை என தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தீர்ப்பளித்தது.

அது மாத்திரமல்லாமல், தகவல் கேரிக்கைக்கு துறைமுக அதிகார சபையின் சொந்தக் கட்டண அட்டவணையினை பயன்படுத்துவது தகவலறியும் சட்டத்திற்கு எதிரானது எனவும் ஆணைக்குழு அறிவித்தது.
 
தகவல் கோரிக்கைகளுக்கு நான்கு பக்கத்திற்கு மேல் பதில் வழங்கப்படுகின்;ற சமயத்தில் மேலதிக ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு அமெரிக்க டொலரும் அதற்கான பெறுமதி சேர் வரியும் துறைமுக அதிகார சபையினால் அறவிடப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இக்கட்டுரையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் விண்ணப்பத்திற்கு பதிலளிப்பதற்கான  மேலதிக இரண்டு பக்கங்களுக்கு நான்கு அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 812 ரூபாவும் அதற்கான வரியாக 64 ரூபாவும் 12 சதமும் கடந்த ஜனவரி 18ஆம் திகதி துறைமுக அதிகார சபையினால் அறவிடப்பட்டது.

இவ்வாறு, அமெரிக்க டொலரில் கட்டணம் அறிவிடப்பட்டமை தொடர்பில் துறைமுக அதிகார சபைக்கு எதிராக இக்கட்டுரையாளரினால் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீடு தொடர்பான விசாரணைகளை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயரத்ன தலைமையில் அதன் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி வல்கம், சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜயவர்த்த மற்றும் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த மேன் முறையீடு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன. இதன் தீர்ப்பு கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்போதே, இலங்கை துறைமுக அதிகார சபையின் 2022ஆம் ஆண்டுக்கான கட்டண அட்டவணையின் பிரகாரம் தகவல் கோரிக்கைக்கு அமெரிக்க டொலரில் குறித்த அதிகார சபையினால் கட்டணம் அறிவிடப்படுகின்றமை 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் 4ஆவது உப பிரிவிற்கு இணங்கிச் செல்லவில்லை என தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தீர்ப்பளித்தது.

இதேவேளை, 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி வெளியிடப்பட்ட 2004/66ஆம் வர்த்தமானியின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கட்டணத்திற்கமைய தகவல் கோரிக்கைக்கான ஒரு பக்க நிழற்படப் பிரதிக்கு 2 ரூபாவும், இரண்டு பக்கத்திற்கு 4 ரூபாவும் அறவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுற்றிக்கைகள் அல்லது ஒழுங்குவிதிகள் மூலமாக பகிரங்க அதிகார சபைகளினால் விதித்துரைக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து, மேற்படி வர்த்தமானியில் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் எவ்வாறிருப்பினும் அந்த முன்னைய கட்டண அடடவணை தொடர்ந்தும் தொழிற்பாட்டில் இருத்தல் வேண்டும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்,  இத்துறைக் பொறுப்பான அமைச்சரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான கட்டண அட்டவணையின் படியே தகவல் கோரிக்கைக்கான கட்டணம் அறவிடப்படுவதாக துறைமுக அதிகார சபை கூறுகின்றது.

அது மாத்திரமல்லாமல், இலங்கை துறைமுக அதிகார சபை சட்டத்தின் 37ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இதற்கான ஒப்புதல் இந்த துறைக் பொறுப்பான அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின்  ஒப்புதலுடனே கட்டணம் அறவிடப்படுவதாக துறைமுக அதிகார சபை குறிப்பிட்டாலும், கடந்த 43 ஆண்டுகளில் அமைச்சர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து அனுமதிகளையும் கண்டறியும் நிலையிலில்லை எனவும் அதிகார சபை தெரிவித்தது.

துறைமுக அதிகார சபையினால் பயன்படுத்தப்படும் கட்டண அட்டவணையானது 'சுற்றறிக்கைகள் அல்லது ஒழுங்குமுறைகள்' மூலம் 'பரிந்துரைக்கப்பட்டதா அல்லது வழங்கப்பட்டதா' என்பதை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு ஆராய்ந்த சந்தர்ப்பத்தில், இலங்கை துறைமுக அதிகார சபையின் 37ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டது போன்று புதிய கட்டணங்களைத் திருத்துவதற்கு அல்லது அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சிடமிருந்து பெறப்பட வேண்டிய அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கவில்லை என்பதை துறைமுக அதிகார சபை ஒப்புக்கொண்டது.

அதன்படி, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான கட்டண அட்டவணைகள் இரண்டிலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் கட்டாய ஒப்புதல்கள் இல்லாமையினால் இது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளுக்கு துறைமுக அதிகார சபை இணங்கவில்லை என்பதையும் ஆணைக்குழு கண்டறிந்தது.

அத்துடன், துறைமுக அதிகார சபையின் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இந்த அதிகார சபையின் பல்வேறு கட்டண அட்டவணைகளை ஆய்வு செய்த போது, இலங்கை துறைமுக அதிகார சபை சட்டத்தின் 37ஆவது பிரிவின் (1)ஆவது உப பிரிவிற்கு அது இணங்கிச் செல்லவில்லை எனவும் தகவலறியும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

துறைமுக அதிகார சபையினால் நான்கு பக்கங்களை இலவசமாகவும் அதற்கு மேலதிகமான பக்கங்களுக்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் கட்டண அட்டவணையை ஒரு பகுதியாகவும் அதிகார சபையின் சொந்த கட்டண அட்டவணையை ஒரு பகுதியாகவும் ஒழுங்கற்ற முறையில் பின்பற்றுகின்றது எனவும் ஆணைக்குழுவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், "துறைமுக அதிகார சபையினால் அமெரிக்க டொலர் மூலம் விதிக்கப்பட்ட அதிக படியான கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் இல்லை" என ஆணைக்குழு குறிப்பிட்டது.

இதேவேளை, தகவல் கோரிக்கைகளை வழங்குவதற்காக துறைமுக அதிகார சபையினால் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 34 ரூபாவும் 26 சதமும் அறிவிப்பட்டுள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்தது.

"கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 ஒகஸ்ட் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சமர்ப்பிக்கப்பட்ட 40 தகவல் கோரிக்கை விண்ணப்பங்களுக்கே இந்த கட்டணம் அறவிடப்பட்டது" என துறைமுக அதிகார சபையின் தகவல் அதிகாரியான கெப்டன் ஹர்ஷ எஸ். வீரசூரிய தெரிவித்தார்.

எனினும், இதற்காக அறவிடப்பட்ட அமெரிக்க டொலரின் பெறுமதியினை தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் அவர் குறிப்பிடவில்லை.

இதேவேளை, கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் 454 தகவலறியும் கோரிக்கைகள் துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 401 தகவல் கோரிக்கைகளுக்கு பதில்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 44 தகவல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
 
இந்த நிராகரிப்புக்கள் அனைத்தும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 22 மேன்முறையீடுகளுக்கு  பதில் வழங்குமாறு குறித்தளிக்கப்பட்ட அதிகாரி உத்தரவிட்டதுடன் 12 மேன்முறையீடுகள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.