பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலோன் தேயிலையை இலங்கை நன்கொடை
பாகிஸ்தானின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்காக இலங்கைத் தேயிலை சபை இலங்கையின் தேயிலை தொழிற்துறையுடன் ஒத்துழைத்தது.
பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம சார்பாக கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஜகத் அபேவர்ண, பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் கேணல் சஜித் ரபீக்கிடம் இந்தப் பொருட்களை கையளித்தார்.
இந்நிகழ்வில் பேசிய துணைத் தூதுவர் அபேவர்ண, பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களைத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோர் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி 2022 செப்டெம்பர் 05ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உமர் பாரூக் புர்க்கியை சந்தித்து சிலோன் தேயிலையின் ஒரு தொகுதியைக் கையளித்தார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெள்ளத்தினால் ஏற்பட்ட பரவலான அழிவுகள் குறித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
உயிரிழப்புக்கள் குறித்து பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,500க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இது 2010க்குப் பின்னர் பாகிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளமாகக் கருதப்படுகின்றது.
Comments (0)
Facebook Comments (0)