'2022 இலங்கை ஹஜ் குழுவுக்கு அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை'
இலங்கையைச் சேர்ந்த ஹஜ் யாத்தீரிகளுக்கு உதவுவதற்காக சென்ற 2022ஆம் ஆண்டுக்கான ஹஜ் தூதுக்குழு, அரசின் எந்தவொரு நிதியினையும் பயன்படுத்தவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
கடந்த வருடங்களைப் போலல்லாது, இந்த வருடம் ஹஜ் தூதுக்குழுவின் உறுப்பினர்கள், அவர்களின் சொந்தப் பணத்திலேயே ஹஜ் கடமையினை நிறைவேற்ற சென்றதாக திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹீம் அன்சார் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை ஹஜ் யாத்தீரிகளுக்கு உதவுவதற்காக சவூதி அரேபியா சென்ற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளும் அவர்களின் சொந்த நிதியிலேயே இந்த வருடம் ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த இந்த தூதுக் குழுவினருக்கான விமான பயணச் சீட்டு, தங்குமிட செலவு, உணவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவர்களே மேற்கண்டவாதாக அவர் கூறினார்.
இந்த வருடத்திற்கான ஹஜ் கடமைளை ஒழுங்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட செலவுகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலேயே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் அங்கீகாரத்துடன் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் அர்ஹம் உவைஸ், சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் பீ.எம். அம்சா மற்றும் ஜித்தாவிற்கான இலங்கை கொன்சியூலர் ஜெனரல் பலா மௌலான ஆகியோர் இந்த வருட ஹஜ் தூதுக்குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்ட போது கடந்த 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவே இன்று வரை செயற்படுவதாகவும், புதிய குழு எதுவும் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
Comments (0)
Facebook Comments (0)