மக்காமா நகர முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் உலகளாவிய ஒற்றுமைக்கு அழைப்பு

மக்காமா நகர முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் உலகளாவிய ஒற்றுமைக்கு அழைப்பு

கலாநிதி ஜே.டி. கரீம்தீன்
சிரேஷ்ட விரிவுரையாளர்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

மன்னர் சல்மானின் ஆதரவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், பல்வேறு முகாம்களுக்கிடையிலான கலந்துரையாடலை வலுப்படுத்துவதற்காக அண்மையில் ஒன்றுகூடினர்.  

சவூதி அரேபியாவின் மக்காவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிக்கான "இஸ்லாமிய சிந்தனைப் முகாம்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்தல்" (Building Bridges Between Islamic Schools of Thought) எனும் 2ஆவது மாநாட்டில், 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் உலகளாவிய இஸ்லாமிய ஒற்றுமைக்கு வலுவான அழைப்பு விடுத்துள்ளனர்.

மன்னர் சல்மானின் ஆதரவில் உலக முஸ்லீம் லீக் (Muslim World League - MWL)  ஏற்பாடு செய்த இந்த மாநாடு, "பயனுள்ள இஸ்லாமிய கூட்டணியை நோக்கி" (Towards an Effective Islamic Alliance) எனும் கருப்பொருளுடன் தொடங்கியது.

இதில் பல்வேறு இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த மூத்த முஃப்திகள், அறிஞர்கள், புலமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.  பலஸ்தீன், சூடான், சிரியா போன்ற நாடுகளில் நடைபெறும் மோதல்கள் மற்றும் உலகம் முழுவதுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் சவால்கள் குறித்து மாநாட்டின் தொடக்க அமர்வுகளில் விவாதிக்கப்பட்டது.  

சவூதி அரேபியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அப்துலாஸிஸ் அல்-அஷெய்க், தனது ஆரம்ப உரையில் முஸ்லிம்களின் ஒற்றுமையை வளர்ப்பதில் இஸ்லாமிய அறிஞர்களின் பொறுப்பினை வலியுறுத்தினார். மூத்த அறிஞர்கள் கவுன்சிலின் (Council of Senior Scholars) செயலாளர் டாக்டர் பஹத் அல்-மஜீத் மூலம் வாசிக்கப்பட்ட அவரது உரையில்,  

"முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக உறவுகளை வலுப்படுத்துவதும், நம்பிக்கையை ஏற்படுத்துவதும், சகோதரத்துவத்தை பலப்படுத்துவதும் நமது கடமை" என்று குறிப்பிட்டார். இஸ்லாமிய உலகின் சவால்கள் "பிளவைத் தூண்டுவதற்குப் பதிலாக ஒற்றுமையின் வாய்ப்பாக மாற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.  சவூதி அரேபியா 'முஸ்லிம் உலகின் இதயம்' என்று பாராட்டிய அஷ்ஷெய்க், பல்வேறு சிந்நனைகளை ஒன்றிணைக்கும் அரசின் முயற்சிகளைப் புகழ்ந்தார்.  


 
உலக முஸ்லீம் லீகின் செயலாளர் முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-இஸ்ஸா, கடந்த ரமழானில் நடைபெற்ற தொடக்க மாநாட்டின் அடிப்படைகளை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டார். இஸ்லாமிய முகாம்களுக்கிடையிலான வேறுபாடுகள் இயல்பானவை; ஆனால் அவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அல்-இஸ்ஸா, மேலும் குறிப்பிடும் போது, எதிர்மறை கோட்பாட்டு விவாதங்கள் வரலாற்றில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், இதில் ஈடுபட்டவர்களை முஸ்லிம் சமூகத்தையும் பாதிப்படையச் செய்கின்ற விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்தார்.

உண்மையான ஒற்றுமைக்கு முழுமையான ஒப்புமை தேவையில்லை, மாறாக பரஸ்பர புரிதலும் மதிப்பும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.  இந்த மாநாடு, இஸ்லாமிய முகாம்களுக்கிடையேயான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.

சவூதியின் மத இராஜதந்திர பங்கு மற்றும் பிளவுகளை சமாளிக்கும் உறுதிப்பாடு ஆகியவை இதில் பிரதிபலித்துள்ளன. மாநாட்டில் கலந்துகொள்பவர்கள், ஒற்றுமைக்கான குறிப்பிட்ட கட்டமைப்புகளை உருவாக்குவதுடன் ஒவ்வொரு பாரம்பரியத்தின் தனித்துவத்தையும் பேணுவதற்கான சமநிலையை ஏற்படுத்த முயல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 'பயனுள்ள இஸ்லாமிய கூட்டணி' கருப்பொருள் வெற்றி பெற, மதத் தலைவர்கள் இந்த சமநிலை முக்கியம் என்று வலியுறுத்துகின்றனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இன்றைய உலகில் இத்தகைய முயற்சிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏனெனில் தீவிரவாதக் குழுக்கள் மதப் பிளவுகளை தங்களின் நலன்க்காக பயன்படுத்துகின்றன. இந்த மாநாடு வெறும் கருத்துக்களைப் பகிர்வதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. இதுவே, இஸ்லாமிய சமூகம் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பிரிவினைப் பிரச்சினைகளை தீர்க்க உதவும் மாற்றத்திற்குரிய அணுகுமுறையாக அமையக்கூடும்.

மாநாடு முன்னோக்கி நகரும் போதே, பங்கேற்பாளர்கள் தங்கள் தனித்துவமான மரபுகளை பேணிக்கொண்டே, இஸ்லாமிய கோட்பாட்டு வேறுபாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பிற்கான தெளிவான கட்டமைப்புகளை உருவாக்குவார்கள்.

மதத் தலைவர்கள் கூறுவதன் படி, இது மாநாட்டின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'பயனுள்ள இஸ்லாமிய கூட்டணி' நோக்கத்தை அடைவதற்கான முக்கியமான ஒரு படியாகும்.