இந்திய நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் திறப்பு
வடக்கு மாகாணத்தில் இந்திய நிதியுவின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து பாடசாலைகளின் புதிய கட்டடங்கள் சம நேரத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ விசேட நிகழ்வு யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் இன்று (15) புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சாள்ஸ், இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் ஆகியோர் இணைந்து இந்த கட்டடங்களை திறந்து வைத்தனர்.
யாழ்ப்பாணத்தில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கதீஜா முஸ்லிம் மகளிர் வித்யாலயம், வறுத்தலைவிளான் அ.மி.த.க.பாடசாலை, வளலாய் அ.மி.த.க.பாடசாலை ஆகியவற்றில் தலா ஒவ்வொரு கட்டடமும் வவுனியாவில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் இரு கட்டடங்களும் கையளிக்கப்பட்டன.
சிரேஸ்ட அரச அதிகாரிகள், அப்பகுதியை சேர்ந்த தலைவர்கள், மாணவர்கள், அப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மக்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
250 மில்லியன் இலங்கை ரூபா செலவில் வட மாகாணத்தில் 27 பாடசாலைகளில் புதிய வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் அங்கமாக இந்த கட்டடங்கள் அமைந்துள்ளன.
இன்று கையளிக்கப்படும் கட்டடங்கள் 5 உட்பட இதுவரை 20 பாடசாலைக் கட்டடங்கள் பூர்த்தியாக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன. ஏனைய ஏழு பாடசாலைக் கட்டட நிர்மாணப் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் அவை கையளிக்கப்படவுள்ளன.
இலங்கை அரசுடன் இணைந்து இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் மக்களை இலக்காக கொண்ட அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த அபிவிருத்தி உதவித்திட்டங்களின் பெறுமதி 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில் இவற்றில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
63, 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தில் இதுவரை 47500 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. அதேநேரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதற்கு சமாந்தரமாக 46,000 வீடுகள் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
வட மாகாணம் உட்பட அகில இலங்கை ரீதியாக 1990 அவசர அம்பியுலன்ஸ் சேவை தற்போது செயற்பாட்டில் உள்ளது. யாழ் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாக விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்காக 600 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களில் யாழ்ப்பாண கலாசார நிலைய நிர்மாணம், 3000 மழை நீர் சேமிப்பு அலகுகளை நிர்மாணித்தல், மொத்தம் 600 வீடுகளையுடைய 25 மாதிரிக்கிராமங்களை உருவாக்குதல், யாழ்ப்பாணத்தில் ஐ.சி.டி - பிஸ்னஸ் இன்கியூபேட்டர் சென்டர் ஒன்றை அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)