ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – ஓர் அறிமுகம்
கடந்த ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மகத்தான கல்விப் பணி ஆற்றி வரும் முன்னணி கல்வி நிறுவனமான ஜாமியா நளீமியா கலாபீடம் பற்றி அண்மைக் காலமாக சில தரப்பினரால் வீண் சந்தேகங்களும் புரளிகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஜாமியா நளீமியா தேசிய ரீதியில் இயங்கி வருகின்ற ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில், நாட்டு மக்களுக்கு அது பற்றிய சுருக்கமானதொரு விளக்கம் இங்கு முன்வைக்கப்படுகிறது.
உருவாக்கம்:
கொடைவள்ளல் எம்.ஐ.எம்.நளீம், இலங்கையின் பிரபல புத்திஜீவிகள் குழாமொன்றின் ஆலோசனையோடும் ஒத்துழைப்போடும் 1973ஆம் ஆண்டு பேருவளையில் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தை அமைத்தார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இக்கலாபீடம் தொடக்க காலம் முதலே சமகால உலகுக்கு இயைபான வகையிலான பரந்த கல்வித் திட்டமொன்றினைக் கொண்டிருந்தது.
அந்த வகையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மரபார்ந்த கல்விச் சட்டகத்தினுள் நவீன கல்வியை உள்ளீர்த்து முழுமையான இஸ்லாமியக் கல்வி முறையொன்றை முன்வைக்கும் வரலாற்றுத் தேவையை அது பூர்த்தி செய்தது.
இஸ்லாமியக் கலைகளையும் சமூக–மானிடவியல் கலைகளையும் ஒன்றிணைத்த இப்பரிசோதனை முயற்சி குறுகிய காலத்திலேயே வெற்றியடைந்து, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்கறியப்பட்ட கல்விமான்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டது.
1982ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டு, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் இலாப நோக்கற்ற கல்விச் சேவை நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள இத்தனியார் கல்வி நிறுவனம், நளீமிய்யா சொசைட்டி மற்றும் முகாமைத்துவ சபை என்பவற்றால் இலாப நோக்கற்ற வகையில் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.
நளீமிய்யாவின் இலக்கு:
நளீமிய்யாவின் கல்வி சார் இலக்குகள், கல்வித் திட்டம், பாடப்பரப்பு என்பன சிறந்த கல்விப் புலமும், அறிவார்ந்த அணுகுமுறையும், பரந்த நோக்கும், ஆன்மீக–பண்பாட்டுப் பயிற்சியும் கொண்ட அறிஞர் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கைக் கொண்டவையாகும்.
அதன் பட்டதாரிகள் இலங்கையின் பல்லின சமூகங்களின் வேறுபட்ட கலாசாரப் பெறுமானங்களை மதிக்கும் பரந்த மனப்பான்மையையும் மனித நேயத்தையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றனர். இந்த வகையில்தான், அதன் தொலைநோக்கும் பணிக்கூற்றும் பின்வருமாறு வரையறுக்கப் பட்டுள்ளன:
தொலைநோக்கு: இஸ்லாமிய உயர் கற்கை, சமூக–மானிடவியற் கற்கை, தகவல் தொழிநுட்ப அறிவு என்பவற்றில் பிராந்திய ரீதியாக முன்னிலை வகித்தலும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறலும்.
பணிக்கூற்று: ஆழ்ந்த அறிவும் நற்பண்பும் தொழில்வாண்மையும் கொண்ட சிறந்த ஆளுமைகளை உருவாக்கி, புத்தாக்கம் மிக்க கற்பித்தல், பயிற்றுவித்தல், ஆய்வுப்பணி என்பவற்றினூடாக அறிவைப் பரப்பி சமூகத்துக்கும் தேசத்துக்கும் முழு மனித இனத்துக்கும் பங்களிப்புச் செய்தல்.
நளீமிய்யாவின் கலைத்திட்டம்:
மேற்கூறிய இலக்கின் பின்னணியில்தான் நளீமிய்யா கலாபீடத்தின் கலைத்திட்டமும் கற்கைநெறியும் வடிவமைக்கப் பட்டன. மட்டுமன்றி, கால மாற்றங்களையும் புதிய சமூக-வாழ்வியல் தேவைகளையும் கவனத்திற் கொண்டு அவை விருத்தி செய்யப்பட்டும் வந்திருக்கின்றன.
மொத்தமாக ஏழு வருடங்களைக் கொண்ட அதன் கற்கை நெறியானது அடிப்படைக் கற்கைகள், இஸ்லாமியக் கற்கைகள் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. க.பொ.த. சாதாரண தரச் சித்தியுடன் அடிப்படைக் கற்கைகளுக்கான நிலையத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் அதன் மூன்று வருட கற்கைக் காலத்தில் தமிழ், சிங்களம், அறபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பதோடு, சிறந்த பண்பாட்டு விழுமியப் பயிற்சியையும் பெற்றுக் கொள்கின்றனர்.
இதே காலப் பிரிவில் அவர்கள் க.பொ.த. உயர்தர கலைப் பிரிவுக்கான பாடங்களைக் கற்று உயர் தரப் பரீட்சையிலும் தோற்றுகின்றனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் மூன்று வருட அடிப்படைக் கற்கைகளின் இறுதிப் பரீட்சை ஆகிய இரண்டிலும் சித்தியடையும் மாணவர்களே இரண்டாவது கட்டமாகிய இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
நான்கு வருடங்களைக் கொண்ட இக்கற்கைக் காலத்தில் மாணவர்கள் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, இஸ்லாமிய நம்பிக்கை, சட்டம் முதலிய இஸ்லாமிய அறிவுக் கலைகளோடு, கணினித் தொழிநுட்பம், ஆங்கிலம், அறபு, சிங்களம் என்பவற்றையும் கற்கின்றனர்.
இலங்கையின் பன்மத-பல்லின கலாசாரச் சூழமைவை கவனத்திற் கொண்டு மத ஒப்பீட்டாய்வு, சமாதானக் கற்கைகள் முதலிய பாடங்களும் இங்கு முக்கிய இடம் பெறுகின்றன.
மாணவர்களிடம் ஆய்வியலையும் ஆய்வு மனப்பாங்கையும் வளர்க்கும் வகையிலான பாடங்கள் கற்பிக்கப் படுவதோடு, ஆய்வுப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். ஆய்வாளர்களுக்கு அவசியமான மென்திறன் (Soft skills)பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப் படுகின்றன.
இவை தவிர, மாணவர்களது எழுத்தாற்றல், பேச்சாற்றல், நுண்கலை ஆற்றல்கள், மொழித்திறன், விளையாட்டுத் திறன்கள் என்பவற்றை விருத்தி செய்யும் நோக்குடன் நளீமிய்யாவின் வெளிக்களப் பிரிவினால் வருடாந்தம் பல கலாசார-விளையாட்டுப் போட்டிகளும் நடாத்தப்படுகின்றன.
இவையனைத்துக்கும் மேலாக, இலங்கையின் அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமொன்றின் இளங்கலைமானிப் பட்டப் படிப்பை வெளிவாரியாக மேற்கொள்வதற்கும் இந்த நான்காண்டுகளில் மாணவர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இதனால், நளீமிய்யாவின் பட்டதாரிகளாக வெளியேறுபவர்கள் ஏக காலத்தில் அதன் உள்ளகக் கற்கை நெறியையும், வெளிவாரிப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
நளீமிய்யாவின் விரிவுரை மண்டபங்கள் மட்டுமன்றி, அதன் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மாணவர்களது ஆளுமையைச் செதுக்குவதில் கணிசமான பங்கை வகிக்கின்றன. பல்லாயிரம் பன்மொழி நூல்களைக் கொண்டமைந்த அதன் நூலகம், காலாண்டு ஆய்விதழாக வெளிவரும் 'இஸ்லாமிய சிந்தனை', அபிவிருத்திக்கும் ஆய்வுக்கும் பயிற்றுவித்தலுக்குமான நிலையம் (ADRT), தகவல் தொழிநுட்பப் பிரிவு, மொழி ஆய்வகம், மாநாட்டு மண்டபம், ஆன்மீகம் கமழும் பள்ளிவாயல், விளையாட்டு மைதானம் என்பன இவ்வகையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஜாமியா நளீமியாவில் நடைமுறையில் உள்ள கலைத்திட்டமானது தேசிய ரீதியில் கல்வித்துறை சார் நிபுணர்கள் பலரால் நுணுக்கமாகப் பரிசீலிக்கப்பட்டு பாராட்டப் பட்டுள்ளதுடன், அதன் கலைத்திட்டம், நிதி மூலங்கள், நிர்வாகக் கட்டமைப்பு முதலிய அனைத்தும் வெளிப்படைத்தன்மை கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நளீமிய்யாவின் பட்டதாரிகள்:
இத்தகைய பரந்ததொரு கல்விப் பின்புலத்தின் காரணமாகவே நளீமிய்யாவின் பட்டதாரிகள் தனித்துவம் மிக்க கல்வியியலாளர்களாகவும், சன்மார்க்க ஞானங்களைக் கற்றவர்களாகவும், புத்திஜீவிகளாகவும், ஆய்வாளர்களாகவும், பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், சிறந்த தொழில் வாய்ப்புக்கான அடிப்படைத் தகைமை பெற்றவர்களாகவும் வெளியேறுகின்றனர்.
நளீமிய்யாவில் பெற்றுக் கொண்ட கல்வியார்வம், விடாமுயற்சி, நேர்மை, பொறுப்புணர்வு முதலிய பண்புகளால் அவர்கள் பல்துறைகளில் பிரகாசிப்பதோடு, சமூகத்துக்கும் தேசத்துக்கும் காத்திரமான பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
நளீமிய்யாவின் தெளிவான கல்விக் கொள்கையின் விளைவாக அதன் பட்டதாரிகள் இன்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கின்றனர். அவர்களில் பலர் தேசிய அளவில் கல்வி, நிதி, நீதி, நிர்வாகம் முதலிய பல தளங்களில் தேசப்பற்றுடன் உழைத்து வருகின்றனர்.
இன்னும் பலர் முதுமானி, கலாநிதிப் பட்டப் படிப்புகளை பூர்த்தி செய்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். நளீமிய்யா கலாபீடத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட நவீனம் தழுவிய நடுநிலையான இஸ்லாமிய பாரம்பரியப் பயிற்சியானது பரந்த நோக்கும் சமநிலையும் கொண்டவர்களாகவும், பல்வேறு தரப்பினருடன் இணக்கமாகச் செயற்படும் பக்குவம் கொண்டவர்களாகவும் அவர்களை மிளிரச் செய்கிறது.
நளீமிய்யாவின் சிந்தனை (Ideology):
நளீமிய்யா கலாபீடம் அதன் ஆரம்ப உருவாக்கம் முதலே நடுநிலைச் சிந்தனையையும் சமநிலைப் போக்கையும் தனது அடிப்படைச் சித்தாந்தமாகவும் கொள்கையாகவும் கொண்டு பயணித்து வந்திருக்கின்றது. எப்பக்கமும் தீவிரமற்ற, இறுகிய கருத்துப் போக்கை ஆதரிக்காத, சூழமைவைக் கருத்தில் கொண்ட சமநிலைச் சிந்தனையையே அதன் கல்விக் கொள்கை எப்போதும் வலியுறுத்துகிறது.
இந்த வகையில், அதன் சித்தாந்தச் சட்டகம் பின்வரும் மையக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:
• இஸ்லாத்தின் மூலாதாரங்கள், அதன் போதனைகள், விழுமியங்கள் என்பவை பற்றிய தெளிவான அறிவைப் பெற்று, மனித இன மேம்பாட்டுக்காக அவ்வறிவைப் பிரயோகித்தல்.
•நம்பிக்கைப் பகுதியில் மாற்றுச் சிந்தனைகளையும் கருத்துக்களையும் தாராள மனப்பாங்குடனும் விரிந்த அறிவுப் பின்னணியுடனும் நோக்குதல்.
•மாற்று மதங்கள் மற்றும் மாற்று நம்பிக்கைகளைப் பின்பற்றுவோருடன் ஒரே அடிப்படை கொண்ட சகோதர மனிதர்கள் என்ற மனப்பான்மையுடன் உறவாடி, பன்மைத்துவ சமூக ஒழுங்கில் வாழ்வதற்கான சாதக நிலையை ஏற்படுத்துதல்.
•நடைமுறை வாழ்வுக்கான இஸ்லாமிய சட்டக் கற்கையில் கடும் போக்கு, இறுகிய நிலைப்பாடு என்பவற்றை தவிர்த்துக் கொள்வதன் மூலம் பிற சமூகங்களோடு சுமுகமாக உறவாடும் சூழலை சாத்தியப் படுத்துதல்.
•அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா என்ற இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்கள் கற்பிக்கப்படும் போது சூழமைவுக்கு முக்கிய இடம் கொடுப்பதன் மூலம், முஸ்லிம் பெரும்பான்மை வாழ்வொழுங்கிலிருந்து விலகி முஸ்லிம் சிறுபான்மைக்குரிய தனித்துவமான வாழ்வொழுங்கை வகுத்துக் கொள்ளல்.
இந்தப் பின்னணியில்தான், அரசின் 'ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம்' (ONUR) தனது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக தெரிவுசெய்த ஏழு உயர் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக நளீமிய்யாவும் அமைந்தது.
அவ்வலுவலகத்தின் அனுசரணையுடன் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான மாதிரிப் பீடமொன்று நளீமிய்யாவில் அமைக்கப் பட்டிருப்பதுடன், வேறு பல உயர்கல்வி நிறுவனங்களோடு இணைந்து தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகளிலும் அது ஈடுபட்டு வருகிறது.
ஜாமியா நளீமியா தொடர்பாக மேலதிக விளக்கங்களை பெற விரும்புவோர் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் info@naleemiah.edu.lk என்ற மின்னஞ்சல் முகவரியையும் நாடலாம்.
பதிவாளர் (Registrar),
ஜாமியா நளீமிய்யா.
17.06.2020
Comments (0)
Facebook Comments (0)