உலக முஸ்லிம் லீகின் 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்ததா?
உலக முஸ்லிம் லீகினால் வாக்குறுதியளிக்கப்பட்ட 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஏன் இதுவரை இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என மக்கள் மத்தியில் காணப்பட்ட கேள்விக்கான பதில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலரை உலக முஸ்லிம் லீக் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்தது.
கடந்த வருடம் ஜுலை 30ஆம் திகதி நெலும் பொகுனவில் இடம்பெற்ற அமைதி, சமாதானம் மற்றம் சகவாழ்வுக்கான தேசிய மாநாடில் கலந்துகொள்வதற்காக உலக முஸ்லிம் லீகின் செயலாளர் கலாநிதி மொஹமட் பின் அப்துல் கரீம் அல் இஸாவினால் இலங்கை வந்தார்.
ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் வைத்தே குறித்த நிதியினை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
எனினும் குறித்த நிதி வழங்கப்பட்டதா இல்லையா என்ற விடயம் இதுவரை பொதுமக்களுக்கு தெரியாதிருந்தது. இது தொடர்பில் ஜாதிக ஹெல உருமயவின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஓமல்பே சோபித தேரர், கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கேள்வி பதிலளிக்கும் வகையில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கையில்,
"உலக முஸ்லிம் லீகின் செயலாளரின் இலங்கை விஜயத்தினை ஏற்பாடு செய்திருந்த அப்துல் காதர் மசூர் மௌலானவிடமே இந்த நிதி தொடர்பில் கேட்க வேண்டும். எனினும் தொடர்பில் உலக முஸ்லிம் லீகின் செயலாளருக்கு கடிதம் எழுதவுள்ளேன்"' என்றார்.
இந்த நிலையில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த வாரம் சாட்சியளித்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இந்த நிதி தொடர்பில் சாட்சியம் வழங்கியிருந்தார்.
இதேவேளை, குறித்த நிதியினை இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறு கையளிப்பது என்பது தொடர்பில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி எழுதிய கடிதத்திற்கு உலக முஸ்லிம் லீகின் செயலாளரிற்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் இதுவரை பகிரங்கப்படுத்தாத நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயர் குறிப்பிட்டிருந்தமையினால் இது தொடர்பில் அவர் விசேட ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையில் குறித்த நிதியினை இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறு கையளிப்பது என்பது தொடர்பில் ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலிற்கு உலக முஸ்லிம் லீகின் செயலாளர் அனுப்பிய கடிதமும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிதியினை வழங்குவதற்கு பின்வரும் தகவல்களை வழங்குமாறு குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டிருந்தது:
1. தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
2. எந்த இனங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்
3. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல்
4. தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்
5. இதனால் விதவைகளாக்கப்பட்டோர் மற்றும் அநாதை சிறுவர்களின் விபரம்
6. ஏனைய தேவையான தகவல்கள்
7. ஜனாதிபதி அல்லது பிரதமரின் நம்பிகை நிதிய வங்கி கணக்கிலக்கம்
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் சமய விவகார அமைச்சருடன் நேரடியாக தொடர்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த கடிதத்தில் உலக முஸ்லிம் லீகின் செயலாளர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)