சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ஊடகவியலாளர்கள் இலங்கை விஜயம்

சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ஊடகவியலாளர்கள் இலங்கை விஜயம்

இலங்கையின் சுற்றுலா துறையினை இந்தியாவில் மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கான விஜயமொன்றினை இன்று (28) புதன்கிழமை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் இந்த குழுவினர் காலி, கண்டி மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட பல சுற்றுலா பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலிற்கு பின்னரான இலங்கை, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான இடம் எனும் மேம்படுத்தல் நடவடிக்கையிலான இந்த விஜயத்தினை மும்பாய் நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் பணியகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

டைம்ஸ் ஓப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒன்பது ஊடகவியலாளர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

தற்கொலை தாக்குதலுக்கு பின்னரான நான்கு மாத காலப் பகுதியில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றம் மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் நேரடி அனுபவத்தினை இந்திய மக்களுடன் பகிர்ந்துகொள்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலிற்கு பின்னர் பல்வேறு ஊடக பிரசார நடவடிக்கைகளினை மும்பாய் நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு அங்கமாகவே ஊடகவியலாளர்களின் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் மும்பாயிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் சாமரி ரொட்ரிகோவினை சந்தித்தனர்.