கண்டியிலுள்ள ஆதரவு நிலையத்தின் வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நடவடிக்கை
"கண்டி மாவட்டத்திலுள்ள பின்தங்கிய சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான ஆதரவு நிலையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக திட்டம்” என்பதற்காக சைல்ட் அக்சன் லங்காவுக்கு, ஜப்பானிய அரசாங்கம் 63,935 அமெரிக்க டொலர்களை (ரூ. 12.4 மில்லியன்) வழங்க முன்வந்துள்ளது.
இந்த நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (3) வியாழக்கிழமை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் சைல்ட் அக்சன் லங்காவின் ஸ்தாபக பணிப்பாளர் தெபோரா எதிரிசிங்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்த ஆதரவு நிலையத்தின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க உதவுவதிலும், அதிகளவு பின்தங்கிய நிலையிலுள்ள நபர்களை உள்வாங்கக்கூடிய வகையில் வளாகத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான இடமாக திகழச் செய்து, கல்விசார் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும், தொழிற்பயிற்சி திறன்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும்.
2006ஆம் ஆண்டில், தெருக்களில் காணப்படும் வறுமையால் பின்தங்கிய நிலையில் காணப்படும் சிறுவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் சைல்ட் அக்சன் லங்கா (CAL) நிறுவப்பட்டது.
இன்று, நாடு முழுவதிலும் இது இயங்குவதுடன், மிகவும் வறுமையான தரப்பினரை சென்றடைந்து, அவர்களுக்கு கல்வி, சுகாதார பராமரிப்பு, போஷாக்கு மற்றும் சிறுவர் பாதுகாப்பு போன்றவற்றில் சம வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், தனது சொந்த பாதுகாப்பு இல்லம், அரவணைப்பு பகுதி மற்றும் பெண்கள் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சிகள் போன்றவற்றினூடாக பின்தங்கிய நிலையிலுள்ள பெண்களுடன் செயலாற்றுவதற்காகவும் CAL தன்னை விரிவாக்கம் செய்துள்ளது.
கண்டியிலுள்ள CAL நிலையம் அதன் மொத்தக் கொள்ளளவு நிலையை எய்தியுள்ளதுடன், அதன் சேவைகளை அனைவரும் பெற்றுக் கொள்வதில் நேர்த்தியான வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தனது நிகழ்ச்சிகளை சுழற்சி முறையில் முன்னெடுக்க நேர்ந்தது. புதிதாக நிறுவப்படும் பகுதியினூடாக, அதிகளவு சிறுவர்களுக்கு இலவச கல்வியைத் தொடரக்கூடியதாக இருக்கும் என்பதுடன், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான பயிற்சிகளைப் பெறுவது மற்றும் பெண்களுக்கு வருமான மீட்டக்கூடிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் பணிகளை பயில்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டில், இரு நாடுகளுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருட பூர்த்தியை நாம் கொண்டாடுகின்றோம். சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கி, இலங்கையில் நிலைபேறான சமாதானத்தை பேணுவதற்கு உதவும்.
இந்த உதவித் தொகை தொடர்பில் எதிரிசிங்க குறிப்பிடுகையில்;
"இந்த வசதியை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சிறந்த அடையாளமாக இந்த புதிய வசதிஅமைந்திருக்கும். மேலதிக வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப நிலையம் மற்றும் நவீன வசதிகள் படைத்த கேட்போர்கூடம் ஆகியவற்றைக் கொண்டு, சைல்ட் அக்சன் லங்காவினால் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவசியமான வலுவூட்டலைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். குடும்பங்கள் வலுவூட்டப்பட்டிருப்பது மற்றும் சிறுவர்கள் கல்வியினூடாக மேம்படுத்தப்படுவது போன்றவற்றுக்கு ஆதரவளிககும் வகையில் இந்த வசதி அமைந்திருக்கும்.
சைல்ட் அக்சன் லங்கா அணியினராகிய நாம், சிறுவர்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்து, இந்த நன்கொடை உதவியை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இதனூடாக பல இளம் பிள்ளைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)