'அக்கரைப்பற்று சுனாமி வீட்டுத்திட்டத்தை உடனடியாக பகிர்ந்தளியுங்கள்'
-றிப்தி அலி-
அக்கரைப்பற்று, நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தை உடனடியாக பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு சவூதி அரேபியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான கோரிக்கைகள் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இன்று வரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை. பயனாளிகளின் பாவனைக்கு இந்த வீட்டுத் திட்டம் கையளிக்கப்படாமையினால் வீட்டுத் திட்டம் பற்றைக் காடாக மாறியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியாவினால் 500 வீடுகளைக் கொண்ட மன்னர் அப்துல்லாஹ் மாதிரி நகரமொன்று அம்பாறை மாவட்டத்தின் நுரைச்சோலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கான சவூதி தேசிய பிரச்சாரம் என்ற நிறுவனத்தினாலேயே இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் சவூதி உள்துறை அமைச்சின் கீழ் காணப்பட்ட இந்த நிறுவனம்- இன்று, நிவாரணம் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான மன்னர் சல்மான் நிலையத்தின் கீழ் செயற்படுகின்றது.
இந்த வீட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக 2011.06.09ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. எனினும், நாட்டிலுள்ள இன விகிதாசாரத்தின் அடிப்படையில் இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் கையளிக்கப்பட வேண்டும் என தொடரப்பட்ட 178/2008ஆம் இலக்க வழக்கிற்கு உயர் நீதிமன்றம் 2009.12.02ஆம் திகதி தீர்ப்பளித்தது.
எவ்வாறாயினும், அக்கரைப்பற்றிலுள்ள இன விகிதாசாரத்தின் அடிப்படையிலேயே இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் சமூகமும் அதன் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் குறித்த வீட்டுத் திட்டம் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் ஒரு தசாப்தத்திற்கு மேலாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே குறித்த வீட்டுத் திட்டத்தினை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்குமாறு கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நாட்டிலுள்ள தேசிய இன விகிதாசாரப்படி இந்த வீட்டுத் திட்டத்தினை கையளிக்க வேண்டும் என்ற விடயம் கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கு ஆதரவான கருத்துக்களே இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், இதனை நிராகரித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், “அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழும் மக்களின் இன விகிதாசாரப் படியே இந்த வீட்டுத்திட்டத்தினை வழங்க வேண்டும்” என்று வாதிட்டுள்ளார்.
இதிலுள்ள வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் எங்கோ இருக்கும் சம்பந்தமே இல்லாத மக்களுக்கு கையளிக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இந்த கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக குறித்த கூட்டத்தில் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த விடயம் நீதிமன்றத்துடன் தொடர்புடையது என்பதனால் சட்டமா அதிபரை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் தீர்மானமொன்றை மேற்கொள்ள இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)