வெள்ள அபாயத்திலிருக்கும் கண்டி புகையிரத நிலையம் காலநிலை மாற்றத்திற்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டும்!

 வெள்ள அபாயத்திலிருக்கும் கண்டி புகையிரத நிலையம் காலநிலை மாற்றத்திற்கேற்ப பாதுகாக்கப்பட வேண்டும்!

கண்டியிலிருந்து றிப்தி அலி

கண்டி மாநகரில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களின் காரணமாக கண்டி புகையிரத நிலையம் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக விக்டோரியன் கட்டிடக் கலையினைக் கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த புகையிரத நிலையம் அழிவடையக் கூடும் என மக்கள் அச்சப்படுகின்றனர். கண்டி மாநகரில் ஏற்படும் வெள்ளப் பெருக்கே இதற்கான பிரதான காரணமாகும்.

இலங்கையிலுள்ள சுற்றுல்லா நகரங்களில் ஒன்றான கண்டி மாநகரில் மேற்கொள்ளப்படுகின்ற முறையற்ற அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக மழை காலத்தில் ஏற்படும் வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், கண்டி நகரின் மத்தியில் பள்ளத் தாக்கான பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள புகையிரத நிலையத்தினை நோக்கியே இந்த வெள்ள நீர் அடித்துச் செல்லப்படுகின்றது. இதன்போது, புகையிரத நிலையத்தின் நுழைவாயிலில் சுமார் மூன்று அடி வெள்ளத்தால் சூழப்படுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று தடவைகள் கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத புகையிரத நிலைய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிய வெள்ளம் இந்த புகையிரத நிலையத்தில் ஏற்பட்டுள்ளது. அது போன்ற வெள்ளமொன்று கடந்த  மே 15ஆம் திகதி புதன்கிழமையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெளிநாட்டு சுற்றுல்லா பிரயாணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பயணிகள் மழைநீரில் நடந்து செல்வதை அவதானிக்க முடிந்தது. மலை நாட்டு புகையிர சேவையின் முக்கிய கேந்திர நிலையமான இந்த புகையிர நிலையம் காணப்படுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்த புகையிர நிலையத்தின் நுழைவுச் சீட்டு விநியோகிக்கும் பிரிவு, களஞ்சியசாலை, நிர்வாகப் பகுதி போன்ற பல பிரிவுகள் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

"வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான முறையொன்று எங்களிடம் இல்லை, அது தானாகவே குறைவடையும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் இழுத்து வரப்பட்ட அனைத்து மண்ணையும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது" என புகையிரத நிலைய உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அண்மைய வெள்ளம் பகல் நேரத்தில் ஏற்பட்டமையினால் சேதங்கள் மிகக் குறைவாகும். இரவு நேரத்தில் இந்த வெள்ளம் ஏற்பட்டால் பாரிய சேதங்கள் ஏற்பட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

"பொலித்தீன் மற்றும் பிளாஸ்தீக் பொருட்களினால் புகையிரத நிலையத்திலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய் மழை காலத்தில் மூடப்படுகின்றது. இதனாலேயே புகையிர நிலையத்தில் ஏற்படும் வெள்ளத்தினை உடனடியாக வெளியேற்ற முடியாதுள்ளது" எனவும் அவர் கூறினார்.

இந்த வெள்ளப் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்த போதும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பல்வேறு சாக்குப் போக்குகளை கூறி வருவதாக கண்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டினார்.

"எவ்வாறாயினும், அவர்களுடைய செயல்களின் பாதகமான விளைவுகளை நாங்கள் எதிர்கொள்கிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார். இப்பிரச்சினைக்கான உடனடித் தீர்வாக தற்காலிக பாலமொன்றை அமைக்குமாறு பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தடைப்பட்டுள்ள கால்வாய் மற்றும் வடிகான்களை துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் இந்திக அபேசிங்க தெரிவித்தார்.

எமது மாநகரில் கால்வாய் மற்றும் வடிகான்கள் அடைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக பொலித்தீன் காணப்படுகின்றது. இதனால், பொதுமக்கள் தங்களின் கழிவுகளை வகைப்படுத்தி சுகாதாரத் தொழிலாளிகளிடம் வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, கண்டி மாநகரில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கழிவு நீர் திட்டமொன்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களினாலேயே கண்டி புகையிரத நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டுவதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகே அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தினுடைய ஜெய்கா திட்டத்தின் கீழ் 22 பில்லியன் ரூபா  நிதியுதவியில் 20 வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்ட கழிவுநீர் திட்டம் வெற்றியளிக்கவில்லை. இதனால் கண்டி நகரிலுள்ள வாவியினைச் சூழவுள்ள பிரதேசங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கண்டி பல்வகை போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டம் மற்றும் குட் செட் பஸ் தரிப்பிடம் ஆகியவற்றினாலும் கண்டி நகரில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாக ஆளுநர் கூறினார்.

இந்தத் திட்டம் 2020 இல் தொடங்கி கடந்த ஆண்டு முடிக்கப்பட இருந்தது, எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த திட்டம் திட்டம் நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், 2027 இல் இந்த திட்டம் நிறைவடையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு மேலதிகமாக கண்டி மாநகரின் நீர் வெளியேற்றப்படுகின்ற மெத எல கால்வாய் பொலித்தீனினால் அடைக்கப்படல் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் ஆகியவற்றினாலும் நகரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக ஆளுநர் மேலும் கூறினார்.

இதேவேளை, கண்டி நகரின் அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்திருந்தன. எனினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் அவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது கண்டி புகையிர நிலையத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு நிரந்த தீர்வு கிடைக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல்ல குணவர்த்த தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் என்பது முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ள ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இந்த விடயத்தில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது காலநிலை மாற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு கவனம் செலுத்தமால் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமையினாலேயே கண்டி மாநகர அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கின்றது.

இதனால், பல்வகை போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டம் உட்பட கண்டி நகரில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

இதன் ஊடாகவே வரலாற்று புனித நகரான கண்டியையும் அதன் மத்தியில் விக்டோரியன் கட்டிடக் கலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புகையிரத நிலையத்தினையும் பாதுகாக்க முடியும்.

படங்கள்: சமூக ஊடகங்கள்