கட்டாரில் இடம்பெற்ற சர்வமத கலந்துரையாடல் மாநாடு
றிப்தி அலி
சர்வமத கலந்துரையாடலுக்கான டேஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கட்டாரின் டோஹாவில் இடம்பெற்றது.
கட்டார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கான நிரந்தரக் குழு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வருட மாநாட்டில் 70 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றிருந்தனர்
சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா மாநாடு கடந்த 2003ஆம் ஆண்டு கட்டாரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கட்டாரின் அப்போதைய ஆட்சியாளரான ஷேக் ஹம்மாத் பின் கலீபா அல் தானியின் வழிகாட்டலில் இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இந்த மாநாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இம்முறை நடைபெற்றது 15ஆவது மாநாடாகும்.
குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகிய சமயங்களுக்கு இடையில் நல்லெண்ணத்தினை உருவாக்கக்கூடிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
இந்த சர்வதேச மாநாட்டின் விளைவாக கட்டார் அரசின் அனுசரனையுடன் கடந்த 2007ஆம் ஆண்டு சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா சர்வதேச நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல், கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பினை முன்னெடுத்தல் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றினை சர்வதேச ரீதியில் மேற்கொள்வதற்காக கட்டாரினைத் தளமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது.
மூன்று சமயங்களின் சமயத் தலைவர்களும் இதன் சர்வதேச ஆலோசனை சபையின் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர். இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இக்கட்டுரையாளருடன் சர்வமத கலந்துரையாடலுக்கான செயற்பட்டாளர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அர்ஹம் ரசாக் ஆகியோர் இந்த வருட மாநாட்டில் பங்கேற்றினருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் மர்ஹும் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, அதன் தற்போதைய முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ அகார் முஹம்மத், சமூக செயற்பட்டாளர்களான பாதில் பாக்கீர் மாக்கார் மற்றும் ஹிசாம் முஹம்மத் போன்றோர் கடந்த காலங்களில் இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
கட்டாரின் பிரதம மந்திரியும், வெளிவிவகார அமைச்சருமான ஷெய்க் முஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசீம் அல் தானியின் ஆதரவுடன் "மாறிவரும் உலகில் குடும்ப கட்டமைப்பு: மதக் கண்ணோட்டம்" எனும் தலைப்பில் இந்த வருடத்திற்கான மாநாடு இடம்பெற்றது. இதன் உப தலைப்பாக குடும்பங்களின் ஒருங்கிணைப்பு, நம்பிக்கை, மதிப்புக்கள் மற்றும் கல்வி ஆகியன காணப்பட்டன.
சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா சர்வதேச நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இப்றாஹீம் சாலே அல் நையிமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டினை கட்டார் வெளிவிவகார அமைச்சின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் லோல்வா பின்த் ராசித் அல் ஹக்தரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது 5ஆவது தடவையாக வழங்கப்படும் சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா சர்வதேச விருதிற்கான வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டனர். சர்வமத கலந்துரையாடலுக்காக உழைக்கின்ற தனிநபர்களிற்கும் அமைப்புக்களிற்கும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் தனிநபர் பிரிவின் கீழ் காஸாவில் மனித நேயப் பணியில் ஈடுபட்டு வருகின்ற வைத்திய நிபுணரான பேராசிரியர் மேட்ஸ் கில்பர்ட் மற்றும் ஜேர்தானின் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கான இளவரசி தாக்ரிட் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அகதீர் ஜெவீஹான் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதேவேளை, சீனாவின் அமித்தி பவுண்டேசன் மற்றும் ஜப்பானின் இஸ்லாமிய மன்றம் ஆகியவற்று அமைப்பு பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இதேவேளை, காஸாவில் வாழும் குடும்பமொன்றுக்கும் இந்த விருதினை அர்ப்பணிப்புச் செய்ய விருதுக் குழு தீர்மானித்திருந்தமை சிறப்பம்சமாகும்.
பலஸ்தீன மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் உதவியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட இந்த விருதினை கட்டார் செரிட்டியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான யூசுப் பின் அஹமத் அல் குவாரி பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, காஸாவினை சேர்ந்த சிறுவன் ரமதான் மஹ்மூத் அபு ஜஸார் - இந்த மநாட்டில் நிகழ்த்திய உரை, பங்குபற்றுனர்கள் அனைவரையும் கண் கலங்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த மாநாட்டில் 25க்கு மேற்பட்ட குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. உலகளாவிய ரீதியில் முக்கியத்துவமிக்க தலைப்புக்களில் இடம்பெற்ற குழுக் கலந்துரையாடல்களில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், செல்வாக்கு மிக்க சமயத் தலைவர்கள் மற்றும் சர்வமத கலந்துரையாடலுக்கான செயற்பட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாநாட்டின் நிறைவு அமர்வில் உகலக் புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சகரான டாக்டர் சாகிர் நாயிக் மற்றும் வத்திகானின் ஆயர் யூஜின் மார்ட்டின் நுஜென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டின் போது இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகிய சமயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்களுக்கான தெளிவுகள் பங்குபற்றுனர்களுக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்லாமல், பல்வேறு சமயத்தவர்களுடன் தனிப்பட்ட தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதுடன், அவர்களிடமிருந்து பல கேள்விகளுக்கு விளக்கங்களும் கிடைக்கப் பெற்றன.
இது போன்ற மாநாடுகளை தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யுமாறு இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பங்குபற்றுனர்கள் அனைவரும் கட்டார் அரசாங்கத்திடமும் சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா சர்வதேச நிலையத்திடமும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)