பிரதேச சபை உறுப்புரிமையை ரத்துச் செய்து வரலாற்றில் தடம்பதிக்கும் குறித்த வழக்கு தீர்ப்பானது RTI சட்டத்தின் வெற்றியாகும்
பிரதேச சபை உறுப்புரிமையை ரத்துச் செய்து வரலாற்றில் தடம்பதிக்கும் குறித்த வழக்கு தீர்ப்பானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வெற்றியாகும்
செப்டம்பர் 28ஆம் திகதி அன்று சர்வதேச தகவல் அணுகல் தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்த இணையவழி கலந்துரையாடல் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி அதாவது சனிக்கிழமை தினமன்று மாலை 6.00 மணிக்கு ஜூம் செயலி வழியாக சிறந்த முறையில் நடைபெற்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வெற்றிகொண்ட மொனராகலை தேர்தல் வழக்கை கருப்பொருளாக கொண்டு இந்த பொது கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பேச்சாளர்களாக பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம். டீ. எம். மஹீஸ், கண்டி மாவட்ட சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட முகாமையாளர் யோகேஸ்வரி கிருஷ்ணன் மற்றும் கந்தலே தேசிய ஒத்துழைப்பு மேம்பாட்டு அறக்கட்டளை திட்ட முகாமையாளர் சுரங்க ரூபசிங்க போன்றோர் கலந்துகொண்டனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்தல் இலஞ்சம் (ஊழல்) தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க வழக்கு தீர்ப்பிலிருந்து கிடைத்த அனுபவம் குறித்து ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,
"மொனராகலை மதுரகலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் 2018ஆம் ஆண்டில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்ற முறையீட்டைத் தொடர்ந்து, பெப்ரல் அமைப்பு, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் உதவியுடன் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பானது பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக காணப்படுவதுடன், 2021 செப்டம்பர் 13 ஆம் திகதி மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் ஊடாக மொனராகல பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து குறித்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தேர்தல் மோசடிக்கு எதிரான முதல் வெற்றியாக இந்த வழக்கு தீர்ப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"நாட்டு பிரஜைகள் எவ்வாறு பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்ற கருப்பொருளில் உரையாற்றிய பேராசிரியர் எம்.டி.எம்.மஹிஷ் குறிப்பிட்டதாவது,
"சராசரி பிரஜைக்கு தனது அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அறிய உரிமை உண்டு என்றபோதிலும் சில ஊடகங்கள் தகவலை திரிபுபடுத்தி பொதுமக்களுக்கு வெளியிடுகின்ற நிலை காணப்படுகின்றது.
ஆகவே பொதுமக்கள் சரியான தகவலைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி சரியான தகவல்களைப் பெற முடியும் என தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
திருமதி யோகேஸ்வரி கிருஷ்ணன் தகவல் சட்டத்தை செயல்படுத்துவதில் தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தகவல் சட்டத்தை பயன்படுத்தும் போது எழும் சவால்கள் குறித்து சுரங்க ரூபசிங்கவும் குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்தனர்.
-சுதந்திர ஊடக இயக்கம்-
Comments (0)
Facebook Comments (0)