'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணியின் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிக்கை செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று (29) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு குறித்த கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்காக இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆலோசனைகளை முன்வைப்பதற்கு 2021ஒக்டோபர் 26 மற்றும் 2021நவம்பர் 06 ஆகிய திகதிகளில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.
பேராசிரியர் சாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் வீரவர்தனலாகே சுமேத மஞ்சுள, வைத்தியர் என்.ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன, சட்டத்தரணி டபிள்யூ.பி.ஜே.எம்.ஆர். சஞ்சய பண்டார மாரம்பே, ஆர்.ஏ. எரந்த குமார நவரத்ன, பானி வேவலஇ மௌலவி எம். ஏ.எஸ். மொஹமட் (பாரி), யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் செயலணியின் ஏனைய உறுப்பினர்களாவர். ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க அவர்கள்இ செயலணியின் செயலாளராக செயற்பட்டார்.
தொழில் வல்லுநர்கள், அரச சாரா அமைப்புகள், மதக் குழுக்கள், பல்வேறு இனக்குழுக்கள், பல்கலைக்கழக சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 1,200 க்கும் மேற்பட்டவர்களின் சாட்சிகளை உள்ளடக்கிய 43 பரிந்துரைகள் மற்றும் 2 பிற்சேர்க்கைகளுடன் இந்த அறிக்கை 8 அத்தியாயங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)