மன்னார் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் வாக்களிக்கும் உரிமை
சபீர் மொஹமட்
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்து வந்தமுஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் 24 மணி நேரத்துள் தமது இருப்பிடம் மற்றும் உடமைகள் அனைத்தையும் விட்டு உடனடியாக வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன.
ஓரே இரவில் ஏறத்தாழ எண்பதாயிரம் முஸ்லிம்கள் மேற்குறித்த ஐந்து மாவட்டங்களிலிருந்தும் அகதிகளாக உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்டார்கள். அங்கிருந்து வந்த இம்மக்களில் பெரும்பன்மையானவர்கள் புத்தளத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டார்கள்.
இதுதவிர கொழும்பு, குருநாகல், மாத்தளை ஆகிய இடங்களிலும் குடியேறினார்கள். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இவர்கள் திரும்பவும் மீள்குடியேற்றப்பட்டார்கள். இருதபோதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சீரான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையினால் கடந்த மூன்று தசாப்தங்களாக புத்தளம் பிரதேசத்தில் அகதிகளாகவே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் எந்த மூலைக்குச் சென்று வாழ்ந்து வந்தாலும் தான் பிறந்து வளர்ந்த பூர்வீகத்துடன் இருக்கின்ற இணைப்பானது எப்போதுமே மாறிவிடாது. அந்த வகையில் அவர்கள் தமது பூர்வீக பகுதிகளுடனும் தமது நிலபுலங்களுடனும் தற்போதும் பிணைப்பினைக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு கொண்டிருப்பதையே அதிகம் விரும்புகின்றார்கள்.
அவ்வாறிருக்க, ஒரு ஜனநாயக சமூகம் என்பது தேர்தல் மூலமே வரையறுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் நோக்கும்போது பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்ட இம்மக்களின் வாக்களிக்கும் உரிமையும் அன்று பலவந்தமான முறையிலே அபகரிக்கப்பட்டன.
மக்களின் ஆணை மற்றும் மக்களின் வரிப்பணம் ஆகியவற்றின் மூலமே அரசாங்கம் இயங்குகின்றது. எனவே மக்களுடைய அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை எவராலும் மறுக்க முடியாது.
எனினும் அகதிகளாக புத்தளத்தில் வாழ்ந்து வருகின்ற மற்றும் மன்னாரில் மீள்குடியேற்றப்பட்ட கிட்டத்தட்ட 7,500 வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதன் உண்மை தன்மையை ஆராய்வதற்காக நாம் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்துடன் இணைந்து கள ஆய்வொன்றிற்காக புத்தளம், மன்னர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்றோம்.
"1990 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சகல தேர்தல்களிலுக்கும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டு எனது பூர்வீக ஊருக்கு சென்று அல்லது கொத்தணி முறையிலோ நான் வாக்களித்துள்ளேன்.
எனினும் இரண்டு மாதங்களுக்கு முன் எமது வதிவு மன்னாரில் உறுதி செய்யப்படாமையினால் எமது குடும்பத்தின் ஐந்து பேரினதும் பெயர்கள் தேருநர் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றது.
இடிபாடுகளுக்கு மத்தியில் உள்ள எனது வீடு மற்றும் நான் விவசாயம் செய்கின்ற நிலம் ஆகியன இன்றும் மன்னாரில் உள்ளது. விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த எம்மக்களின் வாக்குகளை மன்னாரிலிருந்து எந்த அடிப்படையில் நீக்கியுள்ளார்கள்?
யாருடைய தேவைக்காக எமது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகள் தற்போது எம்மத்தியில் எழுந்துள்ளன" என்று புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் தற்போது வாழ்ந்து வருகின்ற ஓய்வுபெற்ற முன்னாள் பொறியியலாளர் ஏ.எல் புர்ஹானுத்தீன் கூறினார்.
அதேபோன்று மன்னார் மாவட்டம், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முஹ்ஸீன் ரைசுதீன் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் பணிபுரியும் பிரதேசம் மற்றும் வாக்களிக்கும் இடம் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்டுள்ளார்.
"தேர்தல் ஆணைக்குழுவில் உள்ளவர்களுக்கு கொழும்பில் பணி செய்துகொண்டு யாழ்ப்பாணம், கண்டி போன்ற பிரதேசங்களுக்கு சென்று வாக்களிக்க முடியும் மேலும் எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என அனைவருமே கொழும்பிலே தான் வசிக்கிறார்கள். எனினும் அவர்கள் வாக்களிப்பதற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஆனால் ஏன் 24 மணி நேரத்துக்குள் பலவந்தமாக விரட்டப்பட்ட எமக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியாது?" என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
1980ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க வாக்காளர்களை பதிவுசெய்யும் சட்டத்தின் அடிப்படையிலேயே வாக்காளர் பதிவுக்கான செய்முறை நடைபெறுகின்றது. அதில் சாதாரண வதிவிடத்தை உறுதிப்படுத்துங்கள் என்றே உள்ளது. எனவே அந்த அடிப்படையில் இவர்களுடைய பூர்வீகம் மன்னராக உள்ள போதிலும் அங்கே வதிவிடம் இல்லாமையினால் பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.
எனினும் இவர்கள் பலவந்தமான முறையில் மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள் ஆகும். இலங்கை வரலாற்றிலேயே இதுபோன்றதொரு துரதிஷ்டவசமான நிகழ்வு இடம்பெறவில்லை.
மேலும் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளவர்களில் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பெயர்களும் காணப்படுகின்றன. அவ்வாறு பெயர்கள் நீக்கப்பட்டுள்ளமையினால் தற்போது அம்மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.
குறிப்பாக அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தங்களின் போது வழங்கப்படுகின்ற நட்டஈடுகள், விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்குகின்ற விசேட கொடுப்பனவுகள், முதியோர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பல்கலைக்கழக அனுமதி போன்ற செயற்பாடுகளின் போது மேற்கொள்ள வேண்டிய கிராம சேவகர் உறுதிப்படுத்துதல்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமது வாக்குரிமைக்காக போராடுகின்ற மக்கள் இயற்கையாக இடம்பெயர்ந்தவர்கள் அல்லர், மாறாக பலவந்தமான முறையில் வெளியேற்றப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றவர்கள். இம்மக்கள் தொடர்ந்தும் இங்கேயே வாழ்ந்திருந்தால் நிச்சயமாக இப்பேற்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. மாறாக இங்கு பல விதமான அபிவிருத்திகளையே கண்டிருப்பார்கள்.
"உதாரணமாக நான் இருபது வயது இருக்கும்போது விடுதலைப்புலிகளினால் விரட்டப்பட்டேன். எனது 20 முதல் 30 வரையான வாலிப வயதினை நான் அகதி முகாம் ஒன்றிலேயே கழித்தேன்.
எனினும் ஏதோ ஒரு வகையில் நான் கல்விகற்று இந்த நிலைமையில் இன்றுள்ளேன்;. ஆனால் என்னுடன் வெளியேற்றப்பட்ட ஏனைய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றும் தனது வாலிபத்தை தொலைத்து விட்டு வீடுகள் காணிகள் எதுவுமே இல்லாத நிலையில் உள்ளார்கள்.
இவர்களுடைய இந்த வாலிப வயது வீணடிக்கப்பட்டு நிர்கதிக்கு உள்ளாகியுள்ளமைக்கு அவர்களா காரணம்? எனவே அரசாங்கம் உடனடியாக இதற்கான சரியானதொரு திட்டத்தை வகுத்து இவர்களை மீள் குடியமர்த்தி இவர்களுடைய வாக்குகளை பாதுகாப்பதற்கான ஒரு நேர்த்தியான வழிமுறையை அமைக்க வேண்டும்" என மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி மூஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் அகதிகளாக வசித்து வருகின்றனர் பெரும்பாலானோரின் ஒரே நோக்கம் தனது பூர்வீகமாகிய மன்னாருக்கு சென்று அங்கே வாழ்வதாகும். என்ற போதிலும் அரசாங்கம் மற்றும் உரிய அதிகாரிகளினால் உரியமுறையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் செய்து தரப்படவில்லை, என்ற குற்றச்சாட்டு அவர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் குடிநீர் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் கூட நிவர்த்தி செய்யப்படாமலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இது பற்றி நாங்கள் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே. ஜெனிற்றனிடம் வினவியபோது "நாங்கள் மன்னார் மாவட்ட கிராம சேவகர்களுக்கு வாக்காளர் பெயர் பட்டியல்களை உறுதிப்படுத்தி தருமாறு பணித்திருந்தோம்,
அவர்கள் அதன் அடிப்படையில் எமக்கு பெயர் பட்டியல்களை வழங்கியிருந்தார்கள், பின்னர் அதிலே நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற நபர்களுக்கு நாங்கள் கடிதம் மூலம் அதனை தெரியப்படுத்தினோம். அத்துடன் அவர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான அவகாசமும் வழங்கப்பட்டது.
அவ்வாறு மேல்முறையீடு செய்பவர்களுக்கு நாங்கள் உரிமை கோரிக்கை விசாரணைகளுக்காக வரும்படி அறிவிப்போம். இதுவரை நாங்கள் கிட்டத்தட்ட 700 பேருக்கு அவ்வாறு உரிமை கோரிக்கை விசாரணைக்காக வரும்படி அறிவித்திருந்த போதிலும் இதுவரை 15 பேர் மாத்திரமே சமூகமளித்துள்ளனர்" என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் "மக்கள் கூறுவதைப்போல் நான் வேண்டுமென்றே அவர்களுடைய பெயர்களை நீக்கி விடவில்லை. தேர்தல் ஆணையகத்தின் பணிப்புக்கு அமைய அவர்களின் ஆலோசனைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி சட்டத்தில் உள்ளபடியே நான் செயல்பட்டேன்.
இது சார்ந்த கடமைகளுக்கு மன்னார் மாவட்டத்தில் உரிய பிரதேசங்களில் உள்ள கிராம சேவகர்கள் அவர்களுடைய முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்கியிருந்தார்கள். ஏதாவது தவறுகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பெயர்கள் வெட்டப்பட்டு இருப்பின் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான பூரண அதிகாரம் குறித்த வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
எம்மோடு இணைந்து கல ஆய்வினை மேற்கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல இந்த ஜனநாயக முரண்பாடுகள் குறித்து பின்வருமாறு கூறினார்.
"இலங்கையின் தேர்தல் வரலாற்றிலே அண்மைய காலங்களிலே இடம்பெற்ற சம்பவங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு விடயம் வடமாகாணத்தில் இருந்து பலவந்தமான முறையில் விரட்டப்பட்ட மக்களுக்கு வாக்களிக்க செல்வதற்காக போக்குவரத்து வசதிகளை வழங்குவதும் அதனோடு இணைந்த ஏனைய பிரச்சினைகளும் ஆகும்.
மிகவும் சவாலான இந்த விடயத்தை தீர்ப்பதற்காக தேர்தல் ஆணையகம் பல முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள். எவ்வாறாயினும் தேர்தல் சட்டத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும்.
இங்கே காணப்படுகின்ற பிரதானமான பிரச்சினை உரிய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையகம் மற்றும் ஏனைய பொறுப்புக் கூற வேண்டியவர்கள் உறிய முறையில் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்காமை ஆகும். எனவே இது ஒருபோதும் வேண்டுமென்றே வேறு நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம் அல்ல.
ஏதாவது ஒரு பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் முயற்சிகள் நடைபெறும்போது சிறு சிறு முரண்பாடுகள் ஏற்படும். எனவே இவ்வாறான முரண்பாடுகளுக்கான தீர்வு சட்டரீதியாக எட்டப்படுவதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இப்பேர்ப்பட்ட பிரச்சினைகளின் போது அரசியல் கட்சிகளே முன்னின்று செயல்பட வேண்டும், துரதிஷ்டவசமாக இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை" என்றார்.
இலங்கையைப் பொருத்தவரையில் இனங்களுக்கு இடையிலே பாரியதொரு முறுகல் நிலைமையை ஏற்படுத்துவதற்கு இதுபோன்ற ஒரு பிரச்சினை போதும். ஒரு சிலர் எரிகின்ற நெருப்பிற்கு மண்ணெண்ணெய் ஊற்றுவது போல் இப்பிரச்சினையை வைத்து இலாபம் தேட முயற்சிப்பார்கள்.
எனவே அவ்வாறானவர்களுக்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது. தமது பூர்வீகத்தையே இழந்து தவிக்குகின்ற இம்மக்களின் உரிமைக்கான குரலை மிகவும் உணர்வுபூர்வமான முறையிலேயே உரிய அதிகாரிகள் அணுக வேண்டும் என்பதோடு அதிகாரிகளுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே ஏனையவர்களின் கடமையாகவும் உள்ளது.
கொத்தணி வாக்களிப்பு முறை என்பது இப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வாக ஒரு போதும் அமைந்துவிடாது. இதற்கான நிரந்தரமான ஒரு தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும்.
Comments (0)
Facebook Comments (0)